கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழக பள்ளி, கல்லூரி தேர்வுகளில் பல்வேறு சலுகைகளை அறிவிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு அமைத்த கல்வியாளர் குழு சமர்ப்பித்த 2வது கட்ட அறிக்கையின்படி தமிழகஅரசு 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளதாகவும், மேலும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக விவாதித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை போதித்து வருகின்றன. பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், பள்ளிக்கல்வியில் கற்றல் கற்பித்தல் பணியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பள்ளிகள் திறப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க பள்ளிக் கல்வித்துறை முன்னாள் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

இந்தக் குழு சார்பில் பல்வேறுகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து கருத்துகளும் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதல்கட்டப் பரிந்துரை அறிக்கை, முதல்வர் பழனிசாமியிடம் கடந்த ஜூலை 14-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இணையவழிக் கல்விக்கு நேரக் கட்டுப்பாடு விதித்தல், மாணவர் சேர்க்கைப் பணிகள் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

அதைத்தொடர்ந்து பள்ளிகள் திறப்பு மற்றும் பாட அளவு குறைப்பு, பொதுத் தேர்வு தொடர்பான 2-ம் கட்ட அறிக்கையை நிபுணர் குழு, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

இதற்கிடையில், மத்தியஅரசு பள்ளிகள், கல்லூரிகளை திறக்கலாம் என அறிவித்தது. அதன்படி தமிழகஅரசும் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கிய நிலையில், பெற்றோர்கள், கல்வியாளர்கள், நீதிமன்றத்தின் எதிர்ப்புகளும், கல்வி நிலையங்கள் திறப்பதும் தளளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான வல்லுநர குழு அளித்துள்ள அறிககையின்படி தமிழகஅரசு செயல்பட முடிவு செய்துள்ளது. அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகே 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்றும், ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் கல்விக்கு மாணாக்கர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடிக் கற்பித்தல் முறை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருவதால், வழக்கமாக நடைபெறும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வை நடத்த முடியாது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்றும் அரசுக்குத் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கவும், தேர்தலுக்கு பிறகு 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாமா அல்லது 12ம் வகுப்பு மட்டும் தேர்வு நடத்தலாமா? என தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாகவும், அதுபோல கல்லூரிகளில முதல் செமஸ்டர் தேர்வு உள்பட சில தேர்வுகளுக்கு தேர்ச்சி அறிவிப்பது குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here