ஊரடங்குக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா? என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.

சென்னை,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் 3-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு முடிந்ததும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்த அட்டவணையை பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் அந்த தேர்வை எப்போது நடத்தலாம்? எப்படி நடத்தலாம்? என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கின்றனர்.

80 சதவீத பாடங்களுக்கு தேர்வு

என்ஜினீயரிங் பிரிவுகளில் ஒவ்வொரு பாடங்களுக்கும் 5 அலகுகள் இருக்கின்றன. கொரோனா ஊரடங்கு முன்பு வரை இந்த பாடங்களில் 80 சதவீதம் வரை நடத்தி முடிக்கப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 20 சதவீத பாடங்கள் நடத்தி முடிக்காமல் இருப்பதாகவும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை நடத்த முயற்சித்தாலும், அது எந்த அளவுக்கு மாணவர்கள் பூர்த்தி செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

இதனால் ஊரடங்குக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாமா? என்று அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 நாட்கள் ஆகலாம்

அதாவது ஒவ்வொரு பாடங்களிலும் உள்ள 5 அலகுகளில், நடத்தி முடிக்காத ஒரு அலகை தவிர மற்றவற்றில் இருந்து கேள்விகள் கேட்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்புவரை அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து தேர்வுகளையும் ஒரு மாதத்துக்குள் முடிக்கும். தற்போது சமூக இடைவெளியை மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதால், சில வழிமுறைகளை கடைபிடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து இருப்பதாகவும், அதனால் தேர்வுகள் நடத்தி முடிக்க 50 நாட்கள் வரை ஆகலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

3 வாரங்களுக்குள்…

இதில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 10 முதல் 12 நாட்களுக்குள் தேர்வுகள் நடத்தப்படலாம் என்றும், தேர்வு முடிவுகள் 2 அல்லது 3 வாரங்களுக்குள் வெளியிடப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை 1-ந்தேதி முதல் 31-ந்தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி இருக்கும் நிலையில், கொரோனாவினால் மேற்கொள்ளப்படும் ஊரடங்கை பொறுத்தே தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here