தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கான தேர்வு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் அரசு, தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

10 வயது கொண்டிருக்கும் குழந்தைகள் இந்த பொதுத்தேர்வால் மனச்சோர்வடைந்து கல்வியின் மீதான ஆர்வத்தை துறக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கல்வியாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கட்டாயக்கல்விச் சட்டம் குலைக்கப்பட்டு மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள பள்ளி ஆசிரியையாக உள்ள மகாலக்ஷ்மி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களின் கல்வி எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் (4ம் வகுப்பு), மகேஸ்வரி (8ம் வகுப்பு) குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ரஞ்சித் தனது பெயரைக் கூட எழுத மிகவும் சிரமப்படுவார் என்றும், மகேஸ்வரி சுமாராக படித்தாலும் படிப்பதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார் மகாலக்ஷ்மி.

மகேஸ்வரிக்கு அவ்வப்போது ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் இருந்து பாடம் கற்பித்து வந்த மகாலக்‌ஷ்மிக்கு காலாண்டு விடுப்பு முடிந்து சிறிது நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவ்விரு மாணவர்களின் பள்ளி இடைநிற்றல்.

ஏனெனில், காலாண்டுத் தேர்வு சமயத்தில்தான் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை மனதில் வைத்துக்கொண்டே மகேஸ்வரி மற்றும் ரஞ்சித்தின் பள்ளிக்கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அழைத்துச் சென்றுள்ளார் அவர்களது தாயார்.

தற்போது அந்த மகேஸ்வரி என்ற சிறுமி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாராம். அவரைப் போல 7ம் வகுப்பில் நன்றாக படித்துக்கொண்டிருந்த சுகுணா என்ற மாணவியும் தனது கல்வியை இடையிலேயே நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றிருக்கிறார் என மகாலக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள திருத்தத்தால் தற்போது நன்றாக படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் மனதிலும் பொதுத்தேர்வு குறித்த அச்சம் மேலோங்கியுள்ளது. நீங்களேல்லாம் தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள் என ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினாலும் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு நடத்தப்படவுள்ள பொதுத்தேர்வு 10,12ம் வகுப்புக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு போன்று இருக்கும் என நினைத்துக்கொள்கிறார்கள் அந்த பிஞ்சுக் குழந்தைகள்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here