பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு செய்ததாக குமரி மாவட்டத்தில் 55 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018-19ம் ஆண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தம் மையங்கள் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் அமைக்கப்பட்டிருந்தன. பொதுத்தேர்வுகள் நடைபெறும்போது தமிழ்  மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் முடிந்த உடனேயே விடைத்தாள் திருத்தம் பணி தொடங்கி விடும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடந்த ஆண்டு அனைத்து தேர்வுகளும் முடிந்த பின்னரே பணி தொடங்கியது. இதனால் ஒவ்வொரு நாளும்  அளவுக்கு அதிகமான விடைத்தாள்களைத் ஆசிரியர்கள் திருத்தம் செய்தனர்.

இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் 55 பேர் மீது தவறு செய்தவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று (11ம் தேதி) முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆஜராகி  விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘தமிழகத்தில் கடந்தாண்டு விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாக ெதாடங்கப்பட்டு விரைவாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், பெரும் மன  உளைச்சலுக்கு மத்தியில் விடைத்தாள் திருத்தம் செய்தபோது சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய தவறுகள் வரும் ஆண்டுகளில் களையப்பட வேண்டும். இந்த கல்வி ஆண்டிலாவது தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணியை  தொடங்க கல்வித்துறை முன்வர வேண்டும்’ என்று அறிவுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here