சென்னை: தமிழ் எழுத்துகளை சீர்திருத்தியவர் வீரமாமுனிவர், என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் சார்பில், சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியில், நேற்று அகராதியியல் தினம் கொண்டாடப்பட்டது.
புதிய சொல்லகராதி
 
இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:
தமிழில், சொல்லுக்கு பொருள் கூறும் நிகண்டு கள் ஏற்கனவே இருந்தாலும், எளிமையான அகராதிகள் இல்லாத நிலையில், வீரமாமுனிவர் தான், மேலைநாட்டு வழக்கப்படி, தமிழ்ச் சொற்களுக்கான பொருளை, அகரவரிசைப்படி தொகுத்து, சதுரகராதியை உருவாக்கினார்.
அவர் பிறந்த நாளை, தற்போது, அகராதியியல் தினமாக கொண்டாடுகிறோம். அவர், தமிழ் எழுத்துகளில், புள்ளி, சுழி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை செய்து எளிமைப்படுத்தினார். சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் வழியாக, மிகப்பிரபலமான, 9 அகராதிகளில் இருந்து, 4 லட்சத்து, 12 ஆயிரம் தனித்துவம் மிக்க சொற்களை எடுத்து, புதிய சொல்லகராதியை உருவாக்கியுள்ளோம். இது, ஆங்கில மொழியின், &’ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி&’யில் உள்ளதை விட, மும்மடங்கு அதிகம். கலைச்சொல் மன்றத்தின் வழியாக, 9,000 புதிய சொற்களை உருவாக்கி, இன்று வெளியிட்டுள்ளோம்.
கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களையும், புதிய சொற்களை உருவாக்கும் களத்தில், சொல் உண்டியலின் வழியாக இணைத்துள்ளோம். அவற்றை, www.sorkuvai.com என்ற, இணையதளத்தில் இணைத்துள்ளோம். பிறமொழியில் உருவாகும், புதிய சொற்களுக்கான தமிழ் சொற்களை, ஒரு மாதத்துக்குள் உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது: 
தாய் மொழி கல்வியால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வளர்ந்துள்ளன. ஆங்கிலம் என்பது, ஒரு இணைப்பு மொழி தான்; அறிவுக்கும் அதற்கும் தொடர்பில்லை.
அதனால், தமிழை வளர்க்க தேவையான முயற்சிகளில், இளைஞர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழின் பரிணாம வளர்ச்சியையும், தமிழர் பாரம்பரியத்தையும், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கீழடி உள்ளிட்ட, தொல்லியல் இடங்களுக்கு, மாணவர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்த உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here