அண்ணா பல்கலை தேர்வில் வினாத்தாள், ‘லீக்’ ஆன புகார் தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு துறை விளக்கம் அளித்துள்ளது. அண்ணா பல்கலை தேர்வுகளில், ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில், வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டு டிசம்பரில் நடத்த வேண்டிய, செமஸ்டர் தேர்வு, பருவமழை காரணமாக முன்கூட்டியே துவங்கியுள்ளது. முதல் நாளான, நேற்று முன்தினம் காலையில், வேதியியல் முதல் தாளுக்கும், பிற்பகலில், வேதியியல் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடந்தது

இதில், பிற்பகல் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. அனைத்து கல்லுாரி தேர்வு மையங்களுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், அவசர தகவல் அனுப்பப்பட்டு, பழைய வினாத்தாள் நிறுத்தி வைக்கப்பட்டு, புதிய வினாத்தாள், ‘ஆன்லைனில்’ வழங்கப்பட்டு, திட்டமிட்ட நேரத்தை விட, அரை மணி நேரம் தாமதமாக, தேர்வு துவங்கியது. இது குறித்து, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.

தேர்வு துறை விளக்கம்இந்த பிரச்னை குறித்து, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பேராசிரியர் வெங்கடேசன் அளித்துள்ள விளக்கம்:அண்ணா பல்கலையில், நேற்று முன்தினம், செமஸ்டர் தேர்வுகள் துவங்கின. வேதியியல் முதல் தாள் தேர்வு, காலையில் நடந்தது. அப்போது, ஒரு தேர்வு மையத்தில், பிற்பகலில் நடக்கவிருந்த வேதியியல் இரண்டாம் தாள் வினாத்தாளை மாற்றி கொடுத்து விட்டனர். தவறை அறிந்த தேர்வு குழுவினர், உடனடியாக மாணவர்களிடம் இருந்து, வேதியியல் இரண்டாம் தாள் வினாத்தாளை திரும்ப பெற்றனர். பின், முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. இந்த விபரம், அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து, பிற்பகல் தேர்வுக்கான வினாத்தாள் பார்சல் முன்கூட்டியே உடைக்கப்பட்டதால், அதில் இருந்த வினாத்தாள், மற்ற மாணவர்களுக்கு, லீக் ஆகி விடக்கூடாது என, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். ஏற்கனவே அனுப்பிய வினாத்தாளை பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தேர்வு மையங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. பின், புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு, தேர்வு நடந்தது. எனவே, வினாத்தாள் லீக் ஆகவில்லை. தவறாக முன்கூட்டியே பார்சல் உடைக்கப்பட்டது. அதற்காக, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை
இதற்கிடையில், பிற்பகல் தேர்வுக்கான வினாத்தாள் பார்சலை, முன்கூட்டியே பிரித்தது தொடர்பாக, விசாரணை நடத்த, துணை வேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் மேற்பார்வையில், தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர்கள், தலைமை தேர்வு குழுவினரிடம், விசாரணை துவங்கியுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here