2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் முறைகேடு செய்துள்ளதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவத் துறையில் சேர்ந்து படிப்பதற்கான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை தமிழகம் பல்வேறு முறைகளில் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக மாணவர்கள் தேர்வு எழுத மிகவும் சிரமப்பட்டனர். அதன்பிறகு தேர்வு எழுதும் மையமே பிரச்னையாக மாறியது. தற்போது அனைத்திலும் புதிதாக ஆள்மாறாட்ட பிரச்னையைச் சந்தித்து வருகிறது தமிழகம்.

சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் தனக்குப் பதிலாக வேறு ஒருவரைத் தேர்வு எழுதவைத்து, தான் எழுதியது போல் அனைத்து ஆவணங்களையும் காட்டி தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கல்லூரியில் படித்தவரின் புகைப்படமும் அவர் தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்டின் புகைப்படமும் வேறு வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்படவே, சர்ச்சையில் சிக்கினார் தேனியில் படித்து வந்த மாணவர்.

பின்னர், அவரும் அவருக்கு உதவிய தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்தது. மகனை மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்பட்டு, தான் இப்படி முறைகேடு செய்துவிட்டதாக வெங்கடேசன் ஒப்புக்கொண்டார். இவரையடுத்து, இவை அனைத்தையும் சரிசெய்ய, மாநிலம் முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் கைரேகை பதிவு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் 2017-18-ம் கல்வியாண்டில் நடந்த நீட் தேர்விலும் ஒரு மாணவர் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அந்த மாணவரின் புகைப்படம் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவர் பீகாரில், இந்தி மொழியில் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் தற்போது அவருக்கு இந்தி தெரியாமல் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் மீது சந்தேகம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சந்தேகிக்கப்படும் மாணவர் மீது சி.பி.சி.ஐ.டியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பல்வேறு வழிமுறைகளை யோசித்து வருகிறது மத்திய அரசு.  மாணவர்களின் கைரேகையை வைத்து அவர் ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்க முடியும் எனக் கூறப்படும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களின் குடும்பப் புகைப்படத்தையும் அளிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய 4,250 மாணவர்களின் விரல் ரேகைகளை, அவர்கள் தேர்வின் போது பதிவான ரேகைகளுடன் ஒப்பிட வேண்டும் என சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களின் கை ரேகைகளும் குற்றவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here