தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை!    நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தில் சிலர் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவக்கல்லூரியில் பருவத் தேர்வின் போது மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில் வகுப்புகள் தொடங்கி முதல் பருவத்தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில், அப்பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியில் சுமார் 41 மாணவர்கள், தேர்வு கண்காணிப்பாளர்களின் உதவியுடன் காப்பியடித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி கேமரா மூலமாக வெளிச்சத்துக்கு வந்த நிலையில் டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக நிர்வாகம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டு கல்லூரிகளின் வளாகத்திலும் செமஸ்டர் தேர்வு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், 41 மாணவர்களும் மீண்டும் பருவத் தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மறுதேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எழுத வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here