அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜூலை 30ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை (பி மெட்டல் பியரிங்க்ஸ்) தங்கள் தொழிற்சாலையில் முதல், பொது ஷிஃப்ட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது. மதியம், இரவு நேர ஷிஃப்ட்களில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களுக்கும் விடுமுறை அளிக்க கோரிக்கைவிடுத்தனர்.

இதை ஏற்கமறுத்த நிர்வாகம் 30ஆம் தேதி விடுமுறை அறிவிப்பதாக இருந்தால் விடுமுறை தினமான ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் ஜூலை 30ஆம் தேதி பணிக்கு வராததால் அன்றைய தினம் அவர்களுக்கு ஊதியம் வழக்கப்படவில்லை. இதை எதிர்த்து தொழிற்சங்கம், சேலம் தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் 47 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டது.தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின்படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது எனத் தெளிவுபடுத்தினார். மேலும் மனுதாரர் நிறுவனம் நிபந்தனையுடன் விடுமுறை அளிக்க முன்வந்த போதும் அதை ஏற்காத ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரிமையில்லை எனக்கூறி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here