ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலருக்குப் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வது, அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகைசெய்யும் அரசாணை 56-ஐ ரத்துசெய்வது என்பன உட்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெறாததை அடுத்து, அவர்களின் போராட்டம் சுமார் 10 நாட்களுக்குப் பிறகு, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பணி இடை நீக்கம், இட மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கும் பட்டியலில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சிலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான பி.கே.இளமாறன் கூறும்போது, ”அரசு ஊழியர்களின் பணிமுறை விதி 1979-ன் கீழ், 17 (பி) என்ற பிரிவு உண்டு. அதன்படி, நிர்வாக ரீதியான தவறுகளுக்காகவோ, பாலியல் புகார்களுக்காகவோ ஆசிரியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் பதவி உயர்வும் 2 ஆண்டுகள் ஊதிய உயர்வும் வழங்கப்படாது.

ஆனால், தங்களின் நியாயமான உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தவறான செயல். இது உடனே விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

இது அரசு, தனது ஊழியர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்கிறார் ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. இதுகுறித்து மேலும் விரிவாகப் பேசிய அவர், ”பொதுவாக அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும்போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பது வழக்கம்.

வழக்கமாக, பேச்சுவார்த்தை முடிவில் போராட்டம் நிறுத்தப்படும், சில கோரிக்கைகளாவது ரத்து செய்யப்படும். போராட்டகால நடவடிக்கைகள்/தண்டனைகள் ரத்து செய்யப்படும். கடந்த காலத் வரலாறுகள் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால் முதல் முறையாக இந்தப் போராட்டத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதுகுறித்து அமைச்சர், பணியாளர் சீர்திருத்தத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினோம். முதல்வரிடமும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

அரசு தனது ஊழியர்களுக்குச் செய்த துரோகமாகத்தான் இதைப் பார்க்கிறேன். ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராடினோம். இந்த அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனநாயக முறையில் போராடினோம். ஆனால் போராட்டத்தைக் கொச்சப்படுத்தும் விதமாக, அரசு எங்களை நடத்தியது.

விருதுகளிலும் புறக்கணிப்பு

பதவி உயர்வு என்றில்லை, நல்லாசிரியர் விருது, கனவு ஆசிரியர் விருது ஆகியவற்றுக்கான தேர்வுப் பட்டியலிலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். உரிமைக்காகக் குரல் கொடுப்பவரும் அநீதிகளைத் தட்டிக் கேட்பவரும் சிறந்த ஆசிரியரே. ஆனால் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்பதாலேயே அலட்சியம் செய்யப்பட்டுவிட்டனர். இது தவறு.

மக்களுக்கும் அரசுக்குமான பந்தத்தைப் பேணிக் காப்பவர்கள் அரசு ஊழியர்கள். இதை உணர்ந்து, கலந்தாய்வுக்கு முன்னதாகவே, ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும்” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here