வாழ்க்கையில் ஒரு முறை வேலை தேடி சேர்ந்தால் போதும், ஓய்வு பெறும் வரை கவலையில்லை. தனியார், அரசு நிறுவனங்களில் இது வழக்கமாக இருந்தது. எங்க அப்பா டிவிஎஸ், நான் டிவிஎஸ், என் மகனும் டிவிஎஸ் நாங்கள் டிவிஎஸ் குடும்பம் என்று மார்தட்டிக் கொண்ட காலம் எல்லாம் ஒன்று இருந்தது.

உலகமயமாக்கல் தொடங்கப்பட்ட பின்னர் எந்த முதலாளியும், தொழிலாளியை நம்புவது கிடையாது. அதே போல, தொழிலாளியும் முதலாளிகளை நம்புவது இல்லை. மாறிக் கொண்டே இருப்பது தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. தனியார் நிறுவனங்களில், 40 வயதில் கூட நேர்முகத் தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலைதான் உள்ளது. இப்போது ஒரே நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்பவன் திறமையற்றவன்,போவதற்கு வழியற்றவன் என்று மாறிவிட்டது.

அரசுதுறைகளில் மட்டும் தற்போது வேலைக்கு உத்திரவாதம் உள்ளது. அதன் சிறப்பாக இருக்கும் இதுவே, அந்த துறைகளை பொறுத்தளவில் பிரச்னையாகவும் இருக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது அரசு துறைகளின் உற்பத்தி திறன் குறைவதற்கு வேலைக்கான உத்தரவாதமே காரணமாக அமைகிறது.

இதனால் அரசுகள் தங்களிடம் உள்ள துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கத் தொடங்கி விட்டன. இதை அறியாத அரசு ஊழியர்கள், கடந்த காலத்தை போலவே வேலையை அலட்சியமாகவும், தங்கள் உரிமையை கோருவதில் ஆவேசமாகவும் செயல்படுகின்றனர்.

விளைவு அரசு துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்படுகின்றன. கடந்த பல ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்களில் இருந்த இந்த போக்கு, தற்போது நேரடியாக அரசு துறைகளிலும் தலைகாட்டத் தொடங்கி உள்ளது.

சமீபத்தில் தெலங்கானாவில் டிஎஸ்ஆர்டிசி என்று அழைக்கப்படும் அரசு போக்குவரத்து கழகத்தில் போராட்டம் வெடித்தது. பஸ் ஊழியர் மற்றும் பணியாளர் சங்கம் 26 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியது. போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும், ஓய்வு பெற்ற வயதை 60 என மாற்ற வேண்டும், வேலையை குறைத்து சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் போன்றவை அவற்றில் முக்கியமானவை.

இது போன்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தும் போது, சங்கங்கள் உப்பு சப்பில்லாத கோரிக்கைகள் சிலவற்றை வைக்கும். உதாரணமாக இது வரையில் காக்கி சீருடை வழங்கியதற்கு பதிலாக அதை சிகப்பாக மாற்ற வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் சீருடையின் வர்ணம் மாற்ற வேண்டும் என்பது போன்றவை அந்த கோரிக்கைகள்.

போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்த உப்பு சப்பில்லாத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மற்றவை குறித்து ஆலோசிக்க கமிட்டி அமைக்கப்படும். உடனே தொழில் சங்கங்கள் வெற்றி வெற்றி என்று கோஷம் போட்டுக் கொண்டே போராட்டத்தை வாபஸ் பெற்றுவிடும். இந்த நடைமுறையை கடைபிடிக்காமல் தெலுங்கானாவில் போராட்டம் நடத்திய சங்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தவே, அந்த அரசு 48 ஆயிரம் பேரை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி விட்டது.

பஸ்களை லீஸ் எடுத்து நடத்தவும் தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இனி 26 கோரிக்கைகள் மீண்டும் வேலை கொடு என்ற ஒற்றை கோரிக்கையாக மாறிவிடும். இதெல்லாம் நம்ம ஊரில் நடக்காது என்பவர்கள் நினைவுக்காக சில சம்பவங்களை குறிப்பிடுகிறேன். தமிழகத்தில் பட்டா, மணியம், கர்ணம் போன்ற பதவிகள் சுந்திரத்திற்கு முன்பு இருந்தே வாரிசு அடிப்படையில் இருந்தன.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது இந்த பதவிகளை எல்லாம் துாக்கி விட்டு, கிராம நிர்வாக அலுவலர் என்று நியமித்தார். இது வரை விஏஓ தான் தொடர்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தார். அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

நிரந்தரப் பணி இடத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இப்படி அடுக்கடுக்கான சிரமங்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்.

இதற்கெல்லாம் உச்சமாக மத்திய அரசின் நிறுவனமான ரயில்வே துறையில் தனியார் மயம் என்ற ஒட்டகம் தலையை காட்டி உள்ளது. நாக்கில் தேனைத் தடவும் விதமாக, இதில் கிடைக்கும் சேவைகள் மற்ற ரயில்களும் தனியார் ஓட்டமாட்டார்களா என்ற ஏக்கத்தை பயணிகளிடம் ஏற்படுத்தும், அந்த சூழ்நிலையில் அனைத்து ரயில்களும் தனியார் மயமாக்கப்படும்.

இப்படி தங்களுக்கு கீழ் எரியும் நெருப்பை, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புரிந்து கொள்வது நல்லது. இதை தடுத்து நிறுத்தும் ஒரே வழி தங்கள் கடமையை வழக்கத்தை விட சிறப்பாக செய்வது தான். அதை விடுத்து போராட்டம் என்று இறங்கினால், ஒரு நாள் இரு நாளுக்கு வேண்டுமானால் அது பலன் கொடுக்கும். தனியார் தொழிற்சாலைகளில் போராட்டம் நடந்து இறுதியில் அந்த நிறுவனம் பூட்டு போடப்பட்டு, அதில் வேலை செய்தவர்கள் நிரந்தரமாக வேலை இழப்பது போலவே அரசு துறைகளிலும் ஏற்படும்.

அந்த நிலை ஏற்படாமல் அடுத்த தலைமுறைக்கும் அரசு வேலை கிடைக்க செய்யும் கடமை இப்போது உள்ள அரசு ஊழியர்களுக்கும் உள்ளது. இது அரசு ஊழியர்கள் உஷாராக நடக்க வேண்டிய காலகட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here