தீபாவளி பண்டிகைக்கு முன்தினம், சனிக்கிழமை, பள்ளி வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, வரும், 27ல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், ஞாயிற்று கிழமை என்பதால், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, பண்டிகை விடுமுறை கிடைக்காமல் போய் விட்டது. இந்நிலையில், இந்த மாதத்தில், எந்தெந்த சனிக்கிழமைகளில், பள்ளி செயல்பட வேண்டும் என்ற விபரத்தை, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் மட்டும், மூன்று சனிக் கிழமைகள், அதாவது வரும், 12, 19, 26ம் தேதிகளில், பள்ளிகளுக்கு வேலை நாள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும், 26ம் தேதி சனிக் கிழமையில் பள்ளிகள் செயல்பட்டால், அடுத்த நாள் தீபாவளியை கொண்டாட, வெளியூர் செல்வதில் சிரமம் ஏற்படும் என, ஆசிரியர்கள் கருதுகின்றனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் வெளியிட்ட அறிக்கை:தீபாவளி பண்டிகைக்காக, முதல் நாளே ஏற்பாடுகள் செய்வதால், அந்த நாளில் பள்ளிகள் செயல்பட்டால், பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தாலும், மறுநாள் தீபாவளி என்பதால், மாணவர்களின் வருகையும், ஆர்வமும் குறைவாக இருக்கும். எனவே, வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here