பள்ளி கல்வி தரத்தில் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி ஆயோக் நீராதாரம், சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல் உள்பட பல்வேறு வகைகளில் மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறது. அந்த வரிசையில் 2016-17-ம் ஆண்டில் மாநிலங்களின் பள்ளி கல்வி தரம் பற்றிய அறிக்கையை வெளியிட்டது.

இதற்காக பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரித்து வரிசைப்படுத்தி உள்ளது. மொத்தம் உள்ள 20 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரளாவின் பள்ளி கல்வித்தரம் 76.6 சதவீதமாக உள்ளது.அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் 72.8 சதவீதம், கர்நாடகம் 69.5 சதவீதம், குஜராத் 61.9 சதவீதம், அசாம் 60.29 சதவீதம், மராட்டியம் 57.43 சதவீதம், தமிழ்நாடு 56.37 சதவீதம் என உள்ளன. இதில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. மிகவும் குறைவாக உத்தரபிரதேசம் 36.4 சதவீதமாக உள்ளது.

இது மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளி சேர்க்கை, பங்களிப்பு, உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் வசதி, நிர்வாக நடவடிக்கைகள் என பலவகையிலும் சேர்த்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.மொத்தம் உள்ள 8 சிறிய மாநிலங்களில் மணிப்பூர், திரிபுரா, கோவா ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. 7 யூனியன் பிரதேசங்களில் சண்டிகார், டாட்ரா-நாகர் ஹவேலி, டெல்லி முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. புதுச்சேரி 4-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு மாணவர் சேர்க்கை, உயர் கல்விக்கு செல்வோர் விகிதம், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்த்தல் ஆகிய பிரிவுகளில் முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here