நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது: மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேச்சு.

விராலிமலை,செப்.15: நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் உள்ளது என இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேசினார்.

விராலிமலை ஒன்றியம் கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சிறப்பாசிரியர் ஆ.வேதமுத்துவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சிறப்பாசிரியர் ஆ.வேதமுத்துவைப் பாராட்டி இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேசியதாவது: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கும். அதனை நாம் வெளிக்கொணர அவருக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் பாடங்களை கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு புரியாத பட்சத்தில், மாணவர்களின் நிலைக்கு இறங்கி வந்து செய்முறைகள் மூலமாக புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். புகைப்படங்கள், வீடியோக்கள் மூலமாகவும் எடுத்துரைக்கலாம்.
எந்த ஒரு விஷயத்தையும் தான் தெளிவாக கற்று உணர்ந்து கொண்டு அதன் பின்னர் மாணவர்களுக்கு எடுத்துரைப்பது நலம்.ஆசிரியர் மாணவர்களிடம் வாய்மை ,தூய்மை,ஒழுக்கம்,மனிதாபிமானம்,சமுதாய அக்கறை,சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை கற்றுத் தர வேண்டும்.
வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கேற்ப ஒரு சராசரி மாணவனை சாதனையாளனாக மாற்றுபவரே நல்லாசிரியர்.மேலும் நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் தான் உள்ளது.இதனை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதேபோன்று, பள்ளிக்காலத்தில் மட்டுமன்றி ஆசிரியரின் வழிகாட்டுதலை ஒரு மாணவர் தன் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்து செயல்பட்டால் சமூகத்தில் சிறப்பான அஸ்தஸ்தைப் பெற முடியும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.

முன்னதாக மாநில நல்லாசிரியர் விருது பெற்ற சிறப்பாசிரியர் ஆ.வேதமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார்.பின்னர் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பாராட்டினார்.

பள்ளித்தலைமையாசிரியர் இரா.சிவக்குமார் தலைமை தாங்கிப் பேசினார்.

இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தளாளர் வெல்கம் மோகன்,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் புலவர் சந்தானமூர்த்தி,சமூக ஆர்வலர் வி.எம்.டி.கந்தசாமி,உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்வினை பள்ளித் தமிழாசிரியை செ.தனலெட்சுமி தொகுத்து வழங்கினார்.

விழாவில் விராலிமலை ஒன்றிய ஆசிரியர்கள்,கவரப்பட்டி ஊர்ப்பொதுமக்கள்,பள்ளி மேலாண்மைக்குழு,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் இராஜகோபால் நன்றி கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here