நிகழாண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சிடெட்) தேர்வர்கள் வரும் செப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 110 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். சிடெட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 19-ஆம் தேதி (ஆகஸ்ட் 19) முதலே பெறப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 18-ஆம் தேதி ஆகும்

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். சிடெட் தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1 தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது.
மதிப்பெண்- தேர்ச்சி விவரம்: தாள்-1-தேர்வில் மொழித்தாள்-1, ஆங்கிலம் (மொழித்தாள்-2), கல்வி உளவியல், கணிதம், சுற்றுச்சூழலியல் ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 150 ஆகும்.

தாள்-2 தேர்வில், மொழித்தாள்-1, ஆங்கிலம், கல்வி உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 90 கேள்விகள், கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு) பகுதியில் இருந்து 60 கேள்விகள் (சமூக அறிவியல் ஆசிரியர்கள் எனில் சமூக அறிவியல் பாடத்தில் 60 கேள்விகள்) என 150 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150 ஆகும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் சிடெட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90) பெற்றவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here