அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 220 பி.எட். இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருக்கும்போதும், இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்துவதில்லை என்ற முடிவை அதிகாரிகள் எடுத்திருக்கின்றனர்.
இதுவரை இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத காரணத்தால், நிகழாண்டில் இந்த 220 பி.எட். இடங்களும் மாணவர் சேர்க்கையின்றி காலியாக விடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக தனியார் பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2,040 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது.
வழக்கமாக பி.எட். கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்கள் அல்லது மூன்று கட்டங்களாக நடத்தப்படும். இந்த நிலையில், நிகழாண்டில் 3,800 மாணவ, மாணவிகள் விண்ணப்பிருந்தபோதும், ஒரே ஒரு கட்டமாக மட்டுமே கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

மொத்தமுள்ள 2,040 இடங்களில் 1,820 இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது. 220 இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்பட்டுள்ளன.
இதில் 7 அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பிவிட்ட நிலையில், 14 அரசு உதவிபெறும கல்லூரிகளில் மட்டுமே இந்த 220 இடங்களும் காலியாக உள்ளன. அதிலும் ஒரு சில கல்லூரிகளில் அதிகபட்சமாக 25 இடங்கள் வரை சேர்க்கையின்றி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், காலியாக உள்ள 220 இடங்களில் சேர்க்கை நடத்த இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்துவதில்லை என அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அரசு உதவிபெறும் கல்லூரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரி பேராசிரியரும் நெட்-செட் சங்க நிர்வாகியுமான நகராஜன் கூறியது:
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். சேர்க்கைக்காக மாணவர்கள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்தச் சூழலில் கலந்தாய்வில் காலியாக இருக்கும் 220 இடங்களை நிரப்ப இரண்டாம்கட்ட கலந்தாய்வை நடத்தப்போவதில்லை என முடிவெடுத்திருப்பது, இந்தக் கல்லூரிகளைக் கடுமையாகப் பாதிக்கும். ஒருசில கல்லூரிகளில் 25 இடங்கள் வரை நிரம்பாமல் உள்ளன. எனவே, காலியாக உள்ள இடங்களையும் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்

இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் தில்லைநாயகி கூறியது:
கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இடங்கள் கிடைக்காதவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக உள்ளனர். ஆனால், கலந்தாய்வுக்குப் பிறகு 220 இடங்கள் காலியாக உள்ள கல்லூரிகள் பெரும்பாலும் ஆண்கள் கல்லூரிகளாக உள்ளன. 
அதுமட்டுமின்றி, கணிதம், ஆங்கில பாடங்களில் மட்டுமே பெரும்பாலான பி.எட். இடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாகவே, காலியிடங்கள் இருக்கும்போதும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
இருந்தபோதும், மாவட்ட வாரியாக பி.எட். காலியிட விவரங்கள் எடுக்கப்பட்டு, இடம் கிடைக்காத விண்ணப்பதாரர்களை செல்லிடப்பேசி மூலம் தொடர்புகொண்டு நேரடியாக சேர்க்கை அளிக்க இப்போது முடிவு செய்திருக்கிறோம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here