புவிவட்டப் பாதையிலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் தற்போது நிலவின் நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில், இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலனை அனுப்பியுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திராயன் 2 முதன்முதலாக படம் பிடித்த பூமியின் படத்தை, இஸ்ரோ ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின், ஆகஸ்ட் 6 ஆம் தேதி, 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்படுத்தினர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி நிலவில் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திராயன் 2 நுழைந்ததாக பெங்களூருவில் இஸ்ரோ மையத் தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், “ நிலவின் சுற்று வட்டப்பாதையில் காலை 9.02 மணிக்கு நுழைந்தது சந்திராயன் 2. கடந்த 14ஆம் தேதி புவி சுற்று வட்டப்பாதையிலிருந்து நிலவை நோக்கி அனுப்பப்பட்டது சந்திராயன் 2. விநாடிக்கு 10.3 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு இலக்கை துல்லியமாக அடைந்தது சந்திராயன் 2. நிலவின் பாதையில் நுழைந்த சந்திராயன், அதன் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு ,அதன் பின், நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக வேகமெடுக்கத் துவங்கும்.’’

“ஆர்பிட்டர் நிலவின் 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருந்து நிலவினை கண்காணித்து வரும். செப்டம்பர் 2ம் தேதி சந்திரயான் 2ல் இருந்து பிரிந்து வெளியேறும் லேண்டர் விக்ரமும், ரோவர் பிரக்யானும் நிலவின் மேற்பரப்பில் செப்டம்பர் 7ம் தேதி தரையிறங்கும். சிறிதளவு பிழை ஏற்பட்டாலும் சந்திராயன் 2 பாதையில் மாற்றம் ஏற்பட்டு விடும்.” எனத் தெரிவித்துள்ளர் சிவன்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here