குறைந்த மாணவர்கள் இருப்பதற்காக பள்ளியை மூடுகிறோம் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 14 (சமத்துவக் கோட்பாடு), 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகும்”

தமிழகத்தில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட அரசுப்பள்ளிகளை மூட முடிவெடுத்திருக்கிறது, தமிழக அரசு. இதன்படி, முதல்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் 6 பள்ளிகள்; வேலூர், சிவகங்கை மாவட்டத்தில் தலா 4 பள்ளிகள்; திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 3 பள்ளிகள்; விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களில் தலா 2 பள்ளிகள்; திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி என மொத்தம் 46 தொடக்க நடுநிலைப்பள்ளிகளை அடையாளம் கண்டிருக்கிறது, தமிழக அரசு.

”பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. தற்போது ஒரு மாணவர்கள் கூட இல்லாத நிலையில்… அந்தப் பள்ளிக் கட்டிடம் பயன் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அந்தப் பள்ளிகள் நூலகமாக தற்காலிகமாக மாற்றப்படுகிறது.” என்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

Schoolபத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 40 இலட்சமாகக் குறைந்துவிட்ட நிலையில் ஏன் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பற்றி பேசாமல் ”மாணவர்கள் இல்லை; அதனால் மூடுகிறோம்” என்பது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வியெழுப்புகிறார்கள் கல்வியாளர்கள்.

”குறைந்த மாணவர்கள் இருப்பதற்காக பள்ளியை மூடுகிறோம் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 14 (சமத்துவக் கோட்பாடு), 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகும்” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தமிழகத்தில் செயல்படும் 37,211 அரசுப் பள்ளிகள் மற்றும் 8,400-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 3,400 பள்ளிகளில் 15 – க்கும் குறைவான மாணவர்கள் படிக்கிறார்கள் என்றும்; தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள 48% தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு இரு வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது என்றும்; அங்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்திவருகிறார்கள் என்றும்; சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கழிவறை வசதியே கிடையாது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர்களிடையே, தனியார் பள்ளிகள் மீதான மோகம் ஒருபுறமிருந்தாலும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புக் குறைபாடுதான் அவர்கள் தனியார் பள்ளியை நாடுவதற்கான பிரதான காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர், கல்வியாளர்கள்.

2018-2019 ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.1,627 கோடி ரூபாயை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்ட தகவல், ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியிருக்கிறது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதுதானே இதன் அர்த்தம்?

முன்பு தேசிய அளவில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகிய அமைப்புகளின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. இந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த அனைவருக்கும் கல்வித்திட்டம்’ (சமக்ர சிக்‌ஷா அபியான்) என்ற அமைப்பு ‘15 மாணவர்களுக்குக் குறைவாகப் படிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதி கிடையாது’ என்று நிதி ஒதுக்க மறுத்துவிட்டது. ‘மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்; அல்லது அருகிலிருக்கும் அரசுப் பள்ளியோடு இணைக்க வேண்டும்’ என்று ஆலோசனை கூறுகிறது, ‘நிதி ஆயோக்’ அமைப்பு. இவையெல்லாம் திட்டமிட்டே எவ்வாறு அரசுப்பள்ளிகள் ஒழித்துக்கட்டப்படுகின்றன என்பதற்கான சான்றுகள்.

”தேவைக்கு அதிகமான தனியார் பள்ளிகளை திறக்க அனுமதித்தது; கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு கோருவதும்தான் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேராமல் போவதற்கான முக்கியமான காரணங்கள்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், புதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்கிறார், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன். ஆண்டுக்கு 1.25 இலட்சம் மாணவர்களை தனியார் பள்ளிகளை நோக்கி தள்ளிவிட்டு, ”அரசுபள்ளிகளில் மாணவர்களில்லை; அதனால் பள்ளிகளை மூடுகிறோம்” என்பது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகிறார். மேலும், அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுவதோடு, அவர்களுக்கான கல்விக் கட்டணங்களாக ரூ100 கோடிக்கும் மேலாக தனியார் பள்ளிகளுக்கு தாரை வார்த்திருக்கிறது, தமிழக அரசு என்று குற்றஞ்சுமத்துகிறார். போதிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டு அங்கு பயிலும் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்த்து கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டுகிறார், இளமாறன்.

”அரசுப்பள்ளிகளில் சேர ஆளில்லை என்ற நிலை வந்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்துவிட வேண்டியதுதான்” என்கிற பிரின்ஸ் கஜேந்திரபாபு, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பிய பின்னரே தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கர்நாடகாவில் சட்டம் உள்ளதைப் போல இங்கும் மாநில அரசு சட்டமியற்ற வேண்டுமென்கிறார்.

நிதி ஆயோக், சமக்ர சிக்‌ஷா அபியான் போன்ற மையப்படுத்தப்பட்ட தேசிய அளவிலான அமைப்புகள் வட்டார அளவில் பல்வேறு பள்ளிகளை ஒருங்கிணைப்பது; அரசு கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வது; அப்பொறுப்பை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது உள்ளிட்டு, தேசிய கல்விக் கொள்கையில் ஆலோசனைகளாக முன்வைத்த பல அம்சங்கள் அரசின் கொள்கை முடிவாக அமலுக்கு வந்துவிட்டன. அரசுப்பள்ளிகள் மூடல் என்ற அதன் உடனடி பலனையும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம் என்பதற்குமேல், இதில் முடிவாகக் கூற வேறு என்ன இருக்கிறது?

– இளங்கதிர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here