மதுரை:  மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில்  முதுகலை பட்டப்படிப்புகளில் தமிழ் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மதுரையில் நேற்று காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் முரளி கூறியதாவது: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்திட்டத்தில் முதுகலை தமிழ், காந்திய சிந்தனை, உளவியல், தத்துவம் மற்றும் சமயம், மனித உரிமை கல்வி, மகளிரியல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப்படிப்புகள் இருந்தன. இந்த முதுகலை பட்டப்படிப்புகள் நடப்பாண்டு முதல் நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழ் மொழி பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் வேளையில், முதுகலை தமிழை நிறுத்துவது என்பது எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. அதேபோன்று காந்திய சிந்தனை, தத்துவம் மற்றும் சமயம் போன்ற படிப்புகள் பல மாநிலங்களிலிருந்து அஞ்சல் வழி மூலம் பெறப்பட்டு வந்தன. காந்தியக்கல்வி நீண்டகாலமாக நாட்டில் நல்ல வரவேற்பு பெற்ற கல்வித்திட்டம்.

மனித உரிமைக்கல்வி என்பது ஐநா சபையின் வழிகாட்டுதலின்படி, இந்திய அரசு முன்னெடுப்பில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலில் கொண்டு வரப்பட்ட முக்கியமான பாடத்திட்டம். மிக சில பல்கலைக்கழகங்களில் உள்ள உளவியல் மற்றும் மகளிரியல் பாடப்பிரிவுகளை நீக்குவது என்பது மிகவும் துயரமானது. குறிப்பாக, கலை படிப்புகளை அதிகளவில் நீக்கியுள்ளது  கண்டிக்கத்தக்கது. தமிழ்மொழி முதுகலைப்படிப்பை தமிழகத்திலேயே மூடுவது என்பது மிகவும் அவலமாகும். மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவற்றை நீக்குவது  ஒரு பல்கலைக்கழகத்திற்கு ஏற்றதல்ல. இந்த படிப்புகளை மறுபடியும் அஞ்சல் வழி மூலம் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here