ஸ்ரீஹரிகோட்டா: பூமியின் சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயன் 2 சென்றது. சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி 11 ராக்கெட் மூலம் நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இது நிலவில் நீர் இருப்பதையும் கண்டறிந்தது. மொத்தம் 312 நாட்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம் 2009 ஆகஸ்ட் மாதத்துடன் தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்தது.  இந்நிலையில், இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. அதன்படி,  சந்திரயான்-1 விண்கலம் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ததால் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வந்தது. இத்திட்டத்திற்கான பணிகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோ தொடங்கியது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.1,000 கோடி ஆகும்.  அதன்படி, 3 ஆயிரத்து 877 எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டு ஜூலை 15ம் தேதி அனுப்பப்பட இருந்தது. ஆனால்,  ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டறியப்பட்டதால் விண்ணில் ஏவுவது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி 22-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் -2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று அதிகாலை, 2.21மணியளவில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். திட்டமிட்ட படி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7- ம் தேதி, நிலவில் இறங்கும் என்று, இஸ்ரோ வி்ஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதுவரை, நிலவின் தென் பகுதியில், எந்த நாட்டின் விண்கலங்களும் தரையிறங்காத நிலையில், அந்த சாதனையை, இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here