மதுரை:மதுரையில் மாணவர்கள் இல்லாத இரண்டு அரசு பள்ளிகளை நுாலகங்களாக மாற்றும் பரிந்துரை குறித்து பொது மக்கள் எதிர்ப்பையடுத்து மீண்டும் விசாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் சேர்க்கை குறைந்த அரசு துவக்க பள்ளிகளை நுாலகங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டம் தோறும் கல்வித்துறை விவரம் சேகரித்து வருகிறது. இதன்படி மதுரையில் வாடிப்பட்டி ஒன்றியம் சித்தாதிபுரம், கொட்டாம்பட்டி ஒன்றியம் கைலாசபுரம் துவக்கப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என ஆய்வில் தெரிய வந்தது. 
இதனால் இந்த இரு பள்ளிகளையும் நுாலகங்களாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.

ஆய்வு குறித்து சர்ச்சை:

 

கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இரு பள்ளிகளை சுற்றிலும் 1 – 5ம் வகுப்பு படிக்க ஒரு மாணவர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் “சித்தாதிபுரம் பள்ளி தலைமையாசிரியர் மீதுள்ள அதிருப்தியால் தான் இப்பகுதியின் 13 மாணவர்கள் நிலக்கோட்டை உதவிபெறும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். தலைமையாசிரியை மாற்றினால் எங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ப்போம்” என மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் கூறியதாவது: சித்தாதிபுரம் தலைமையாசிரியை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற ஆய்வின்படி தான் நுாலகமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. கிராமத்தினர் கோரிக்கை அடிப்படையில் இரு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை வாய்ப்பு குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here