மும்பை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்ததை போல மகாராஷ்டிராவையும் மும்பை, விதர்பா என இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே  குற்றம்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மும்பை  பிரபாதேவியில் நேற்று முன்தினம் இரவு நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ராஜ் தாக்கரே கூறியதாவது:தற்போது காஷ்மீரை, இரண்டாக பிரித்திருக்கிறார்கள். அடுத்து மகாராஷ்டிராவையும் விதர்பா, மும்பை என பிரிக்க திட்டமிடுவார்கள். அவ்வாறு மகாராஷ்டிரா மாநிலம் பிரிக்கப்பட்டால், உங்கள் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ராணுவம்  நிற்கும். இணையதளம், மொபைல் போன் சேவையை துண்டித்து விடுவார்கள். இரண்டாக மட்டுமல்ல மகாராஷ்டிராவை துண்டு துண்டாக கூட மத்திய ஆட்சியாளர்கள் பிரித்து விடக்கூடும். அவர்களது (மத்திய அரசு) அடுத்த இலக்கு மகாராஷ்டிரா மாநிலமாகத்தான் இருக்கக்கூடும். நீங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பாஜ.வை புகழ்ந்து பேசுபவர்களாக இருந்தாலும் சரி உங்களையும் அவர்கள் விட்டுவைக்க  மாட்டார்கள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருப்பது மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியாகும். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீரில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அப்படியானால், 370வது சட்டப்பிரிவு இல்லாத மற்ற மாநிலங்களில் ஏன் புதிய வேலைவாய்ப்புகள்  உருவாக்கப்படவில்லை? அதற்கு காரணம் என்ன? இவ்வாறு ராஜ் தாக்கரே கூறினார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here