வேடசந்துார் : புது ஓய்வூதிய திட்டம் குறித்து தனிக்குழு அறிக்கை அளித்த பிறகும் தமிழக அரசு மவுனம் சாதிப்பதால் ஊழியர்கள், ஆசிரியர்கள் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் 2003 ஏப்.1 முதல் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதன்பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் கிடைக்கவில்லை. இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் ஐவர் குழுவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 பிப்ரவரியில் அமைத்தார். பின் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ்., தலைமையில் தொடர்ந்த குழு 2018 நவம்பரில் முதல்வரிடமும், மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் அறிக்கையை வழங்கியது.

இருப்பினும் இதுவரை அரசு முடிவு எடுக்காமல் மவுனம் சாதிக்கிறது. 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களில் 11 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றும், மரணம் அடைந்தும் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்பு தொகை என ரூ.484 கோடி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. புது ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்துள்ள திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறுகையில், ” ஜெயலலிதா அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here