ஜம்மு காஷ்மீர்மாநிலம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் நாட்டின் தலைப் பகுதி. ஆனால், எப்போதும் அங்கு வாழும் மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்து வந்த மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் இணைக்க ஒப்புக் கொண்டார். இதன் பின்னர் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க இந்திய ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மாநில அந்தஸ்தை இழந்து யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாறுகிறது. இதற்கு சட்டமன்றம் இருக்கும். கூடுதலாக லடாக் பிரிக்கப்பட்டு மற்றொரு யூனியன் பிரதேசமாக உருவாகிறது. இதற்கு சட்டமன்றம் கிடையாது.

இந்த அறிவிப்பை இன்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இதையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

மாநில அரசு என்றால் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாநிலம் என்பது ஒரு பிரிவு. தனி அரசாக செயல்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தை மேற்கொள்ளும். சட்டத்தை இந்த அரசே அமைத்துக் கொள்ளலாம். இதற்கென தனிப்பட்ட சட்டமன்றம், முதல்வர், நிர்வாகம் என்று இருக்கும். ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுவார். எல்லைகளைப் பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சில அதிகார பகிர்வுகள் இருக்கும்.

மாநிலங்களுக்கு இடையே நிலப்பரப்பு, புவியியல் அமைப்பு, வரலாறு, ஆடை அணிவது, பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்கள், அனைத்தும் வேறுபட்டு இருக்கும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மாகாண அரசு, பிரின்சிலி ஸ்டேட் என்று இரண்டு நிர்வாகங்கள் இருந்தன. மாகாண நிர்வாகம் பிரிட்டன் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பிரின்சிலி ஸ்டேட் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது.

யூனியன் பிரதேசம் என்றால் என்ன?
மத்திய அரசின் நேரடி பார்வையின் கீழ் யூனியன் பிரதேசங்கள் வருகிறது. லெப்டினென்ட் கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பர். மத்திய அரசு பரிந்துரைக்கும் ஒருவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயல்படுவார். தற்போது டெல்லி, புதுச்சேரி தவிர வேறு எந்த யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இல்லை.

சிறிய பகுதியைக் கொண்ட யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். நிர்வகிக்க முடியும்.

குறிப்பாக மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசத்துக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டால், மாநிலத்துக்கு தனியாக நிர்வாக அமைப்பு இருக்கும். சட்டம் ஒழுங்கை அந்த நிர்வாகமே பார்த்துக் கொள்ளும். ஆனால், யூனியன் பிரதேசம் அப்படி அல்ல. மத்திய அரசு நேரடியாக தனது அதிகாரத்தை செலுத்த முடியும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here