பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த ஒதுக்கிய ரூ.1,627 கோடியை செலவழிக்காமலேயே தமிழக அரசு திருப்பி அனுப்பியது ஏன் என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுக்குப் பல்வேறு நிதி நெருக்கடி இருந்த போதும் 2018 -19 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த ரூ.28,757 கோடியை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்து இருந்தது.

அதில் தற்போதைய ஆண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையில 2018-19- ஆம் ஆண்டில் ரூ.1,627 கோடியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ. 894 கோடியும், இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.437 கோடியும், சிறப்புக் கூறு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.296 கோடியும் ஆக மொத்தம் ரூ 1,627 கோடி செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளை மாற்றியமைத்திருக்கலாம். உள்கட்டமைப்பு வசதிகள், கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்ட பாடவாரியான ஆய்வகங்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள், கூடுதல் வகுப்பறைகள் என ஏராளமான தேவைகள் இருக்கும்போது ரூ.1,627 கோடியை செலவழிக்காமலேயே திருப்பி அனுப்பியது ஏன்? இதற்கான காரணத்தைக் கண்டறிந்து எதிர்காலத்தில் இவ்வாறு நடந்திடாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
முன்னதாக 2017-18 நிதி ஆண்டில் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் 5,920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையில் 3,676 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here