ஒவ்வொரு உயிரின வகையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம செயல்பாடுகள் மூலம் உருமாறி உண்டானவை. அவை ஒவ்வொன்றின் மரபியலும் மிகவும் மதிப்பு மிக்கவை. ஒரு உயிரினம் அடியோடு அழிந்து விட்டால் பிறகு அதை மீண்டும் உருவாக்க யாராலும் முடியாது. இயற்கையின் இயல்பான செயல்பாடுகளின் மூலமாகத்தான் அவை பரிணாமம் பெற்று உருவாயின. 
எனவே இயற்கையில் இருக்கும் ஒவ்வொரு உயிரின வகையையும் காப்பாற்றுவது நமது கடமை.ஒவ்வொரு உயிரின வகைக்கும் அதற்கென்று பிரத்யேகமான ஒரு வாழிடம் உள்ளது. அந்த வாழிடத்திற்கு மாற்றம் வந்தாலோ அல்லது அழிந்து போனாலோ அந்த வாழ்விடத்தில் மட்டுமே வாழக்கூடிய உயிரினம் பிறகு நிலைத்து இருக்காது. மனிதர்கள் அளவுக்கு அதிகமாக தலையிடுவதால் பல வகை உயிரினங்களின் வாழிடச்சூழல் பாழாகி கொண்டிருக்கின்றது. அதனால் அந்த இடங்களில் மட்டுமே வாழத்தகுதி பெற்ற உயிரின வகைகள் முற்றிலும் அழிந்து விடுகிறது.
புலியின் சிறப்பு
இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. புலியும், பூனையும் உட்பட்ட குடும்பத்துக்கு ஆங்கிலத்தில் ‘பெலிடே’ என்று பெயர். இந்தக் குடும்பத்தை சேர்ந்த பெரிய விலங்குதான் புலி. இதன் அறிவியல் பெயர் ‘பாஞ்ரோ டைக்ரிஸ்’ (லியோ) என்பதாகும். உடல் அழகில் முதலிடம் வகிப்பது புலிதான். முதிர்ந்த ஒரு புலியின் நீளம் சராசரியாக வால் உட்பட மூன்று மீட்டர் இருக்கும். எடை 160 கிலோ முதல் 230 கிலோ வரை இருக்கும்.சிறுத்தைகளின் உடலில் உள்ள புள்ளிகளும், புலிகளின் உடலில் உள்ள கோடுகளும், அவற்றின் உடல் வடிவத்தை மறைப்பதற்கு உதவுகின்றன. காட்டு மரங்களின் உச்சியிலிருந்து ஊடுருவி வருகிற வெளிச்சத்திலோ, காற்றில் ஆடிக்கொண்டு இருக்கும் புற்களுக்கிடையோ இருக்கும் புலியையோ, சிறுத்தையையோ நாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு இயற்கையாக அவை சுற்றுச்சூழலுடன் கலந்திருக்கும். அவற்றின் இருப்பிடங்களில் வைத்து புலியையோ, சிறுத்தையையோ பார்க்க முயற்சிப்பவர்களுக்குதான் அவற்றை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் தெரியும்.ஒரு புலியின் சராசரி ஆயுள் 11 ஆண்டு. பெண் புலியின் பேறு காலம் 105 முதல் 113 நாட்கள். ஒரு பிரசவத்தில் மூன்று, நான்கு குட்டிகள் பிறக்கும். புலி தோன்றிய இடம் சைபீரியா என்று கருதப்படுகிறது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சூரியா, கொரியா, சீனா, மியான்மர், ஜாவா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சுமத்ரா, பாலத்தீவு ஆகிய இடங்களுக்கு பரவியது. ஆனால் இலங்கையை அடையவில்லை.
‘வங்கப்புலி’ வேட்டை
இந்தியாவிற்கு வந்த கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்த வெள்ளைக்கார வேட்டைக்காரர்கள் முதல் முதலாக புலியுடன் மோதியது வங்கத்தில்தான். அதனால்தான் ஆங்கிலேயர்கள் இந்திய புலிகளுக்கு ‘வங்கப்புலி’ என்று பெயர் சூட்டினார்கள். இன்றைய நிலையில் கிழக்கு ஆசியாவில் மட்டும்தான் புலிகள் அதிகமாக இருக்கின்றன. பளபளப்பான உடல், உறுதியான மெத்தென்ற பாதங்கள், நீண்ட வெள்ளை மீசை, சொரசொரப்பான நாக்கு இவையெல்லாம் புலிக்கு உண்டு; பார்வை திறனும், கேட்கும் திறனும் அதிகம்.மிகத் திறமையாக பதுங்கி நடக்கும் பழக்கம் உள்ளவை. தேவைப்பட்டால் மட்டுமே புலியும் மரம் ஏறும். தேவையில்லாமல் மனிதர்களையோ, விலங்குகளையோ தாக்கும் இயல்பு புலிக்கு கிடையாது. சப்தத்தையும், வெளிச்சத்தையும் புலிகள் விரும்புவதில்லை. பிற விலங்குகள் சப்தமிட்டால் புலி அதை கேட்டு ஓடிச் செல்கிறது. பெரும்பாலும் புலி, பயந்த குரங்குகளின் சப்தத்திற்கும், புள்ளி மான்களின் நீண்ட அலறலுக்கும், காட்டு நாய்களின் குரைப்பொலிக்கும், காட்டுக்கோழி மற்றும் மயிலின் கூவலுக்கும் அஞ்சுகிறது. நெருப்பை கண்டாலும் பயப்படும்.புலியும் உணவும்ஒரு புலி மிகக்கடுமையான பசியின் போது மற்றொரு புலியை தின்னவும் முற்படும். தன் குட்டிகளை தின்னும் பழக்கம் உள்ளதால் ஆண் புலியின் அருகிலிருந்து குட்டிகளை பெண் புலி அப்புறப்படுத்துவதுண்டு. சமய சந்தர்ப்பம் ஒத்துழைத்தால் மற்ற விலங்குகள் புலியின் உணவை தட்டிப் பறிப்பதுண்டு. புலியின் இரையை மற்ற விலங்குகள் தொடாது எனும் கருத்து தவறு. தான் கொன்ற இரையை மட்டுமே புலி தின்னும் என்ற கருத்தும் தவறு. சில சமயம் அழுகிய மாமிசம் கூட புலிக்கு விருப்பமான உணவுதான்.புலி மிக மெதுவாக, கவனமாக, ரகசியமாக நடக்கும். கால் விரல்களை ஊன்றி, தரையில் வைத்து ஒரு மீட்டர் அகலத்தில் அடியெடுத்து வைக்கிறது. பிறகு பதுங்கி இரை மீது தாவி விடுவதுதான் வழக்கம். மானை, மற்ற விலங்குகளை அதிக துாரம் துரத்தி செல்வதற்கான சக்தி புலிக்கு இல்லை. புலியும், சிறுத்தையும் பெரும்பாலும் மறைந்திருந்துதான் தாக்கும். எனவே, இரை பக்கத்தில் வரும் வரை அதன் கண்ணில் படாது. மறைந்திருக்க வேண்டிய அவசியம் புலிக்கு உள்ளது. இந்த தேவைக்காகத்தான் புலியின் உடலில் கோடுகள் உள்ளன. இரையாகிற விலங்குகளின் மிகப்பக்கத்தில் வரும் போது மட்டுமே புலி பாய்ந்து பிடிக்கிறது. பிறகு சிக்கிக் கொண்ட விலங்குளை கழுத்திலோ, முதுகிலோ அடித்து கொல்கிறது.
அழிவில் புலி இனம்
புலிகள் அழிந்து வருவதற்கு காடுகளை அழிப்பதுதான் முதல் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. பரந்த அளவில் புலிகளை வேட்டையாடுதல் மற்றொரு முக்கிய காரணம். புலியை கொன்று ஒருவன் சமூகத்தில் பெரிய வீரனாக மதிக்கப்பட்ட காலம் முன்பு இருந்தது. இப்போது அந்த நிலை இல்லாதது ஆறுதல். புலிகள் அழிவதற்கு தொற்று நோய்கள் முக்கிய காரணம் ஆக இருந்தன.இந்தியாவுக்கு வெளியே ஜாவா, சுமத்ரா, சைபீரியாவில் உள்ள புலிகளும், மற்ற இன புலிகளும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே புலிகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.புலிகள் பற்றி பல மூட நம்பிக்கைகள் இருந்தன. புலியின் தோலும், மீசையும், பல்லும், நகமும், மாமிசமும், கொழுப்பும் மனிதனுக்கு பயன்படும் என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். புலித்தோலை விரிப்பாக பயன்படுத்துவது என்பது செல்வ செழிப்பை குறிப்பதாகவும், வெற்றியை குறிப்பதாகவும் இருந்தது. இப்படியெல்லாம் மூட நம்பிக்கைகள் இருந்த போதும் புலிகள் முற்றிலும் அழியாமல் தப்பியது அதிசயம்தான்.
புராஜெக்ட் டைகர்
புலிகளை காப்பாற்றுவதற்காக 1993 ல் துவக்கப்பட்ட திட்டம்தான் ‘புராஜெக்ட் டைகர்’. புலிகளை காக்கும் நோக்கில் 17 மாநிலங்களில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் ‘நாகார்ஜூனா சாகர் டைகர் ரிசர்வ்’ தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புலிகள் காப்பகம். புலிகள் அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 2,200 புலிகள்தான் இருக்கின்றன. எல்லா உயிர்களையும் அதனதன் இயல்பான வாழிடத்தில் வாழ அனுமதிக்க வேண்டும். புலிகள் வாழ்ந்தால் காடுகள் வாழும்.இந்த பூமி நமக்கு மட்டும் உரிமையானது அல்ல; அனைத்து உயிரினங்களுக்கும் உரிமை ஆனது. அவை இங்கே நிலைத்திருந்தால் தான் நாம் நிலைத்திருக்க முடியும். எந்த உயிரினத்தையும் அழிய விடக்கூடாது என்பது நம் எண்ணமாக இருக்க வேண்டும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here