சென்னை, 
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அதனை தமிழக அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-ம் ஆண்டு அடிப்படையில், 2021-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கான முன்சோதனையை மேற்கொள்வதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட கணக்கெடுப்பு பணிகள் அடுத்த மாதம் ஆகஸ்டு 12-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந் தேதி முடிக்கப்பட வேண்டும். மக்கள்தொகை முன்னோட்ட கணக்கெடுப்பு பணிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நடைமுறை சிக்கல்
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
10 ஆண்டுகள் கழித்து 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும். இந்த பணியின்போது ஏற்படும் நடைமுறை சிக்கலை தெரிந்துக்கொண்டு அவற்றை தவிர்ப்பதற்காக, இப்போதே மக்கள் தொகை முன்னோட்ட கணக்கெடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள உள்ளது.
காஞ்சீபுரம்- சிவகங்கை-நீலகிரி
இந்த பணிகள் தொடர்பான தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரை வழங்கும் குழுவின் உறுப்பினராக வருவாய் நிர்வாக ஆணையர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னோட்ட கணக்கெடுப்பு பணிக்கு தமிழகத்தில் சிவகங்கை, நீலகிரி மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த (2011-ம் ஆண்டு) மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தேச மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சம் என்று கணிக்கப்பட்டது. தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 என்ற அளவில் மக்கள் தொகை இருந்தது. மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் 7-வது இடத்தை பிடித்திருந்தது.
தகவல்கள்
2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆண்கள், பெண்கள், வயது, எழுத்தறிவு, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு மக்களின் அடர்த்தி, அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள், குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படும் என்று தெரிகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here