என்ஜினீயரிங் படிப்புகளில்

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இதுவரை 79 ஆயிரத்து 594 பேர் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

சேருவதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு (2019–20) மொத்தம் 479 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 652 இடங்கள் இருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 25–ந்தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு நடைபெற்ற அந்த கலந்தாய்வு கடந்த மாதம் 28–ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பொது கலந்தாய்வு கடந்த 3–ந்தேதி தொடங்கியது. ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

79 ஆயிரம் பேர்

கடந்த 3–ந்தேதி தொடங்கிய முதல்சுற்று கலந்தாய்வு 13–ந்தேதியும், 2–ம் சுற்று 18–ந்தேதியும், 3–வது சுற்று 23–ந்தேதியும் முடிவடைந்தது. இந்த நிலையில் 4–வது சுற்று நடைபெற்று வருகிறது. இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) அந்த சுற்று கலந்தாய்வும் நிறைவு பெற இருக்கிறது. அதன்படி பொது கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது.

மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 652 இடங்களில் 2–வது சுற்று முடிவில் 21 ஆயிரத்து 532 இடங்களும், 3–வது சுற்று முடிவில் 46 ஆயிரத்து 213 இடங்களும் நிரம்பி இருந்தன. 4–வது சுற்றுக்கான கல்லூரிகளை தேர்வு செய்து இறுதி செய்யும் நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இறுதி ஒதுக்கீடு இன்று அளிக்கப்பட இருக்கிறது.

அதன்படி, இதுவரை 79 ஆயிரத்து 594 பேர் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்ந்து இருப்பதாக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து துணை கலந்தாய்வு இன்று தொடங்கி, நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற இருக்கிறது.

இன்று தொடக்கம்

இதுகுறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குனர் விவேகானந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாளை(இன்று) முதல் 3 நாட்களுக்கு துணை கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் 79 ஆயிரத்து 594 பேருக்கு கல்லூரிகள், பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக நடைபெறும் துணை கலந்தாய்வுக்கு 6 ஆயிரம் பதிவு செய்து இருக்கிறார்கள். அதையும் சேர்த்து பார்த்தால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என்ஜினீயரிங் கல்லூரிகளின் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சேர்க்கை அதிகரிக்கும்

கடந்த 4 ஆண்டுகள் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்து இருப்பதாகவே கல்வியாளர்களும், தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 88 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன. துணை கலந்தாய்வு இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. அந்த கலந்தாய்வு முடிவில் மேலும் காலி இடங்களின் எண்ணிக்கை குறையும்.

5 ஆண்டுகள் மாணவர் சேர்க்கை ஒப்பீடு

ஆண்டு – கல்லூரிகள் – மொத்த இடங்கள் – காலியாக இருந்த இடங்கள்

2015–16 – 538 – 1,80,000 – 72,032

2016–17 – 525 – 1,85,000 – 1,01,318

2017–18 – 518 – 1,75,500 – 89,149

2018–19 – 509 – 1,78,000 – 1,06,100

2019–20 – 479 – 1,67,652 – 88,058(இதுவரை)

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here