சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு வகுப்பாவது விளையாட்டு கல்வியை நடத்தும் வகையில் பாடத்திட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக் கல்வி  வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடச்சுமை அதிகமாக உள்ளது.

பாடத்திட்டம் சார்ந்து பள்ளி ஆசிரியர்கள் வழங்கும் வீட்டுப்பாடங்கள் மற்றும் படிப்பு, எழுதுவது என்று மாணவர்களின் காலம் அதிலேயே சென்று விடுகிறது. அதனால் அவர்களுக்கு விளையாடுவதற்கு நேரம் இல்லை என்று கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விளையாட்டுகள், உடற்பயிற்சிகளை மறந்தே விட்டதாகவும்  குறைகூறுகின்றனர்.

அதனால் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டத்தில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் செயல்பாட்டுடன் கொண்டு வர முடியும் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

  இதையடுத்து பாடத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதில் வாழ்வியல் திறன்கள், தரமான கல்வி ஆகியவற்றுடன் உடல் நலம், உடற்கல்வி  ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து பாடங்களில் சேர்க்க முடிவு செய்துள்ளது.

அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12 வகுப்புகளில் நாள் ஒன்றுக்கு ஒரு பாடவேளை விளையாட்டு வகுப்பு கட்டாயம் நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ துறை மூலம் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   விளையாட்டு தொடர்பான பாடங்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

ஆனால் இதற்கு எழுத்து தேர்வு ஏதும் கிடையாது. ஆனால் மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் பிரிவில் தடகளம், குழு விளையாட்டுகள், தனி நபர் விளையாட்டு, சாதனை விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.

இவற்றில் ஏதாவது ஒன்றை கட்டாயம் மாணவர்கள் விளையாட வேண்டும். ஒரு வருடத்தின் இடையில் இவற்றை மாற்றி வேறு ஒன்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்.

ஆனால், ஒரு வகுப்பில் படிக்கின்ற அனைத்து மாணவர்களும் குழு விளையாட்டில் பங்கேற்கவேண்டியது அவசியம்.  இரண்டாவது பிரிவில் உடல் நலம் மற்றும் உடல் உறுதி தொடர்பான விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.

மூன்றாவது பிரிவில் சமூகம் சார்ந்த விஷயங்கள் இடம் பெறுகின்றன. குறிப்பாக வேலை மற்றும் செயல்பாட்டு கல்வி இடம் பெறுகிறது.

நான்காவது பிரிவில் உடல் மற்றும் செயல்பாட்டு பதிவேடுகள் இடம் பெறும். இவற்றில் முதல் பிரிவுக்கு 50 மதிப்பெண்கள், 2, 3 பிரிவுகளுக்கு 25 மதிப்பெண்கள், நான்காவது பிரிவுக்கு மதிப்பெண்கள் ஏதும் வழங்கப்படமாட்டாது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here