சூப் மற்றும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் அஜினோமோட்டாவால், உடல் நலத்திற்கு எந்த கேடும் நேராது என்று, ஜப்பான் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அஜினோமோட்டா சேர்க்கப்பட்ட உணவை உண்பதால், நரம்புத் தளர்ச்சி- ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அஜினோமோட்டோ ஒரு ஸ்வீட் பாய்சன்… நாவிற்கு சுவையைத் தந்து உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனக் கலவை என்று, பலரும் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதனால் வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளில், அஜினோமோட்டோவை சேர்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். துரித உணவகங்களில் மட்டுமே, அஜினோமோட்டோ அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அஜினோமோட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அட்சுஷி மிஷூகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அஜினோமோட்டோவின் மோனோசோடியம் குளூட்டாமேட் (monosodium glutamate) உப்பானது கரும்பு, சோளம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுவதாகவும், ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமல் சீனாவில் இருந்து தயாரித்து அனுப்பப்படுகின்ற போலியான தயாரிப்புகளே ஆபத்தானவை என்றும் விளக்கம் அளித்தார்.

சென்னையின் பிரபல உணவுமுறை நிபுணரான டாக்டர் தாரிணி கிருஷ்ணன், அஜினோமோட்டோ உடலுக்கு சிறந்த சுவையூக்கி என்றும், அதனால் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது என்று சான்றளித்தார்.

அஜினோமோட்டோ நிறுவனமும், டாக்டர் தாரிணி கிருஷ்ணனும் தெரிவித்த கருத்துகளில் உள்ள உண்மைத் தன்மை குறித்து அறிய மருத்துவத்துறை பேராசிரியர் பிரேம் குமாரை அணுகினோம். அஜினோமோட்டோவை ஆய்வு செய்த அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்களையே அவர் பதிலாகத் தந்தார்.

தினமும் உணவில் 2 கிராமிற்கு மேல் அஜினோமோட்டோவை சேர்த்து வந்தால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி, ஒற்றைத் தலைவலி, படபடப்பு, வியர்வையுடன் கூடிய நடுக்கம் மற்றும் இரைப்பையில் ஜீரணக்கோளாறு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

நாவிற்கு சுவையூட்டும் அஜினோமோட்டோவின் மோனோசோடியம் குளூட்டாமேட் உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதா ? வேண்டாமா ? என்பதை உடல் நலனில் அக்கறை கொண்ட உணவுப் பிரியர்களிடமே விட்டுவிடுகிறோம்..!

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here