தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 2, 381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்தது.

அதன்படி, முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சோதனை அடிப்படையில் தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது

இதையடுத்து, கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் குழந்தைகள் சேர்க்கையில் சற்று தொய்வு ஏற்பட்டது.

 இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகள் பெற்றோரிடம் ஏற்படுத்தி விழிப்புணர்வு காரணமாக தற்போது பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.

எல்கேஜி வகுப்பில் மூன்று வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளும், யுகேஜி வகுப்பில் நான்கு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை நாமக்கல், கோவை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கை இலக்கை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்க்கை சற்று குறைவாக உள்ளது.

வகுப்பறைச் சூழலில் மாற்றம் தேவை:

இது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் கூறுகையில், அரசின் சார்பில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

இருப்பினும் சில இடங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மைய சூழலில்தான் செயல்படுகின்றன. வகுப்பறைகளுக்கு போதுமான அளவுக்கு கல்வி உபகரணங்கள், இருக்கைகள் வழங்கப்படவில்லை.

இதனால் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றனர்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: எல்கேஜி-
யுகேஜி வகுப்புகள் இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டுள்ளது.

படிப்படியாக அதில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும். மழலையர் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் திறன், பேசுதல் மற்றும் எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட தரமான ஆரம்பக் கல்வி செலவில்லாமல் அளிக்கப்படவுள்ளது.
பெற்றோர் முன்வர வேண்டும்:

அதே நேரத்தில், அங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, அவர்கள் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பள்ளிக் கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளன.

ஏழை பெற்றோரின் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதற்காக வரும் செப்.30-ஆம் தேதி வரை குழந்தைகள் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, விஜயதசமி தினத்திலும் குழந்தைகளைச் சேர்க்கலாம்.

அனைத்து மையங்களிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படும். எனவே பெற்றோர் எந்தவித தயக்கமும் இன்றி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here