மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மக்களிடம் கருத்து கேட்பதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை மவுனமாக இருப்பது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை-2019, கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கல்விக் கொள்கை வெளியான நாளில் இருந்தே நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதுபற்றிய பெரிய விவாதங்களும் கல்வியாளர் இடையே நடக்கிறது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்விக்கான அறக்கட்டளை நடத்துவோர், இலவச கல்வி வழங்குவோர் பலரும் ஏழை எளிய மற்றும் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை இந்த கல்விக் கொள்கை பாதிக்கும் என்றும், அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்குரிய விவாதமாகவே தற்போது மாறியுள்ளது. எங்கு திரும்பினாலும் தேசிய கல்விக் கொள்கை பற்றிய விவாதம்தான் நடக்கிறது.

இந்த கொள்கை சரி என்று ஒரு சாராரும், குறைகள் அதிகம் இருக்கிறது என்று பெரும்பாலானவர்களும் வாதித்து வருகின்றனர். முதலில் இந்த தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதும் கிளம்பிய எதிர்ப்பால் விழித்துக் கொண்ட மத்திய அரசு ஜூன் மாதம் வரை காலம் நிர்ணயம் செய்து கருத்து கேட்கப் போவதாக அறிவித்தது.

ஆனால், பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது, அந்த கால அவகாசத்தை ஜூலை மாத இறுதி வரை நீட்டித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கல்விக் கொள்கை என்பது 11 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் தலைப்பில் பள்ளிக் கல்வியும், இரண்டாம் தலைப்பில் உயர்கல்வியும், மூன்றாம் தலைப்பில் ஆசிரியர் கல்வியும், நான்காம் தலைப்பில் தொழிற்கல்வியும், ஐந்தாம் தலைப்பில் வாழ்க்கை கல்வியும் வைக்கப்பட்டு அதற்கான வரையறைகள், விளக்கங்கள், நெறிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன

. பள்ளிக் கல்வியை பொறுத்தவரையில் அதன் படிநிலைகளான ஆரம்பக் கல்வியின் முன் பருவம், ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி ஆகியவற்றை மாற்றி அமைத்து ஒரே குடையின் கீழ் அதாவது ‘ஒருங்கிணைந்த பள்ளி வளாகம்’ அமைக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை கூறுகிறது. குழந்தைகளுக்கான கல்வியில், ‘குழந்தைகள் 3 மொழிகளை படிக்க வேண்டும்’ என்றும் தெரிவிக்கிறது.

 அத்துடன், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கலாம், தேவைப்பட்டால் 8ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கலாம் என்று மேலோட்டமாக கூறுகிறது. அறிவியல், கணக்கு பாடங்கள் இரண்டு மொழிகளில் கற்பிக்கப்படும் என்றும் கூறுகிறது.

இந்த வரைவு அறிக்கையில் நிறைய தேர்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 3, 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டும். 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள நாட்களில் 8 பருவத் தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது முதல் வகுப்பு தொடங்கி பிளஸ்2 வரை, குழந்தைப் பருவத்தில் இருந்தே தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் பருவத் தேர்வுகள் குறித்து இந்த பரிந்துரையில் தெளிவாக ஏதும் கூறவில்லை.

அதேபோல, உயர்கல்வியை பொறுத்தவரையில் பிளஸ்2 முடித்த பிறகு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும். ஆரம்ப கல்வி முதல் பிளஸ்2 வரை தேர்வு எழுதிவிட்டு வரும் மாணவர்கள் உயர்கல்விக்குள் நுழையும்போதும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.

 குறிப்பாக, 15 ஆண்டுகள் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண்க என்ன ஆவது என்ற கேள்வி எழுகிறது.

 நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்தான் உயர்கல்வியை தீர்மானிக்கும் என்றால், பள்ளிக் கல்விக்கு என்ன மதிப்பு என்று இந்த பரிந்துரை தெளிவுபடுத்தவில்லை. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையில் இருப்பதாக கல்வியாளர்கள், வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான பதில் அரசிடம் இருந்து கிடைக்காத நிலையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கண்டனக் குரல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஜூலை மாதம் இறுதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடம் நேரிடையாக கருத்து கேட்பதை தவிர்த்துவிட்டு, இணைய தளத்தில் கல்விக் கொள்கையை வெளியிட்டு அதன் மூலமே கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் பெரும்பெரும்பாலானவர்கள் இணையத்தில் கருத்து தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில் தேசிய கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்காக மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்துவது வழக்கமாக இருந்தது

.  குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த குழு தமிழகத்தில் அமைக்கப்பட்ட போது, அதன் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் மற்றும் அந்த குழுவின் உறுப்பினர்கள் மாவட்ட வாரியாக சென்று நேரடியாக பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். அதற்கு பிறகுதான் கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது

.
ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கை மீது கருத்து கேட்க மாநில அரசின் சார்பில் இதுவரை  கருத்துகேட்பு கூட்டம் ஏதும் நடத்தவே இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கல்வி என்பது மாநில அரசுகளின் உரிமையாக இருப்பதால், அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியாக எல்லோரும் பார்க்கின்றனர். ஒற்றைத் தன்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இந்த கல்விக் கொள்கையின் பரிந்துரையை தயாரிப்பதற்கு முன்னதாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு நாட்டின் எந்த மாநிலத்திலும், நேரில் சென்று தொடக்கப் பள்ளிகளை பார்வையிட்டதாக தெரியவில்லை.

ஆனால், ஒரே ஒரு மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளுடனும், ஒரே ஒரு ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகளுடனும் பேசியுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளின் நிலையை இந்த குழு பார்வையிட்டதா என்றும் கேட்கின்றனர்.

பெரு நகரங்களில் படிக்கும் மாணவர்களை கருத்தில் கொண்டும், கிராம மாணவர்களை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது ஆபத்தானது, அநீதியானது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பதை தவிர்த்துவிட்டு, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் பழனிச்சாமி தலைமையில், கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

அதில் தேசிய கல்விக் கொள்கை பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அதை எப்படி செயல்படுத்துவது என்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதில் பங்கேற்க அழைக்கப்பட்ட பல நூறு பேருக்கு பதிலாக 50 பேர் மட்டுமே பங்கேற்றது வேதனைக்குரியது
15 ஆண்டுகள் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண்கள் என்ன ஆவது என்ற கேள்வி எழுகிறது.

நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்தான் உயர்கல்வியை தீர்மானிக்கும் என்றால், பள்ளிக் கல்விக்கு என்ன மதிப்பு என்று இந்த பரிந்துரை தெளிவுபடுத்தவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கை மீது கருத்து கேட்க மாநில அரசின் சார்பில் இதுவரை  கருத்துகேட்பு கூட்டம் ஏதும் நடத்தவே இல்லை. கல்வி என்பது மாநில அரசுகளின் உரிமையாக இருப்பதால், அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியாக எல்லோரும் பார்க்கின்றனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here