அரசுப்பணியை ராஜினாமா செய்தவர் பென்ஷன் உள்ளிட்ட பணப்பலன்களை பெற முடியாது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, ஆசிரியையின் மனுவை தள்ளுபடி செய்தது.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் கடந்த 1.7.1967ல் இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் என் குடும்பச்சூழல் காரணமாக கடந்த 30.9.1978ல் ராஜினாமா செய்தேன். 10 ஆண்டுகள் பணியாற்றினால் பென்ஷன் பெறத்தகுதி உண்டு.

ஆனால், நான் 11 ஆண்டுகள் பணியாற்றி இருந்ததால் பென்ஷன் கேட்டு பலமுறை விண்ணப்பித்தேன். ஆனால், அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே, எனக்கு நிலுவைத்தொகையுடன் கூடிய பென்ஷன் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசுத்தரப்பில், ‘‘மனுதாரர் பணியை ராஜினாமா செய்துள்ளார். எனவே, அவருக்கு பென்ஷன் வழங்க முடியாது. மிகவும் காலதாமதமாகவே மனு செய்யப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ராஜினாமா செய்தல், ஓய்வு பெறுதல் மற்றும் விருப்ப ஓய்வில் செல்லுதல் என தனித்தனி வகை உள்ளது.

இதை ஒன்றோடு ஒன்று இணைத்து பார்க்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு பணியில் உள்ளவர் தனக்கு எந்தவித பணப்பலன்களும் தேவையில்லை எனும்போதுதான் ராஜினாமா செய்கிறார். ராஜினாமா செய்யும் ஒருவரால் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், விருப்ப ஓய்வில் செல்பவருக்கு இது சாத்தியம் இல்லை. எனவே, ராஜினாமா செய்வோரால் பணப்பலன்களை ேகட்க முடியாது.

மனுதாரரின் ராஜினாமா ஏற்கப்பட்டதால்தான் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எப்போது ஒருவரின் ராஜினாமா ஏற்கப்பட்டு, பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறாரோ, அப்போது அவரால் பென்ஷன் கேட்க முடியாது. மனுதாரருக்கு கருணைப்படி கூட வழங்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here