பொய்யான நம்பிக்கை கொடுத்தது தவறு!” – திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மனுவும் பெற்றோர்கள் கருத்தும்

நீட் விலக்கு மசோதா மனு இரண்டு வருடத்திற்கு முன்பாகவே தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

இந்தச் செய்தி நிறைய பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் சட்ட மசோதா

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவப் பட்ட படிப்புகளுக்கான சட்ட முன் முடிவு2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்ட முன் முடிவுகளைச் சட்டமாக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கேட்டு பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஒப்புதல் கோரி இரண்டு அண்டுகள் முடிவடைந்த நிலையில், 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டமுன் முடிவுகளைச் சட்டமாக்கக் கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்’ சார்பில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார் என்றும், இந்தத் தகவல் மத்திய அரசின் சார்பாக 2017ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னது மத்திய உள்துறை அமைச்சகம்.
இதையடுத்து சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட தேதிகளை அறிக்கையாக வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்தச் செய்திக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்பே அரசுக்குத் தெரிந்து எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள் பொதுமக்கள். இது குறித்து பொதுமக்கள் சிலரிடம் கருத்துக்கள் கேட்டோம் .

பொதுமக்கள் கருத்து

இலக்கிய நிலா – திருநெல்வேலி:
“தமிழக அரசின் இந்தச் செயல்பாடு உண்மையில் வருத்தத்தை அளிக்கிறது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தாலும் தமிழகத்தில் நீட் விலக்கு நிச்சயம் கிடைக்கும் எனக் கிராமப்புற மாணவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இந்தச் செய்தியால் குழந்தைகளின் கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. கிராமப் பகுதியில் உள்ள பெற்றோர்கள் எல்லோருமே தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மையமாக வைத்துதான் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதுக்கு இனி வாய்ப்பு குறைவு தான். இனி நீட் தேர்வை எதிர்கொண்டுதான் ஆகணும். ஆனால், அரசாங்கம் காலம் தாமதிக்காமல் சொல்லியிருந்தால் எங்கள் பிள்ளைகளின் ஏமாற்றமாவது குறைந்திருக்கும்” என்கிறார்.
திலீபன் – விழுப்புரம்:
“அரசாங்கத்தின் இந்தக் காலதாமதம், முழுக்க முழுக்க தவறானது. இதுதான் நிலவரம்னு தெரிஞ்ச பிறகு எதுக்கு காலதாமதம் செய்யணும். பாடங்கள், கல்வி முறை மாற்றங்கள், பயிற்சி வகுப்புகள்னு மாணவர்களைத் தயார்படுத்த ஆரம்பிச்சிருக்கலாமே… நம்மகிட்ட திறமையில்லாமல் இல்லை… பயிற்சிகள்தான் இல்ல. அதைக்கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தியிருந்தால் குழந்தைகளின் தற்கொலைகளையாவது தடுத்து இருக்க முடியும். இதை காலதாமதம்னு சொல்வதைவிட ஏமாற்றம்னுதான் சொல்லணும்.

திலீபன்

நீட்டுக்குப் பயிற்சி வகுப்புகள் கொடுப்பதாகச் சொல்றாங்க. பத்தாம் வகுப்புக்குப் பிறகான அந்தப் பயிற்சி வகுப்புகள், மாணவ மாணவிகளை கூடுதல் மனஅழுத்தத்திற்குதான் கொண்டு வருகிறது. தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறதில்லை. கட் ஆஃப் முறையையும் இணைக்கிறாங்க. மாற்றம் வரும் என்று நம்புவதை விட நம் வீட்டு குழந்தைகளை தயார்படுத்த ஆரம்பிக்கும் பணிகளை தொடங்குவோம்” என்கிறார்.
கபீலன் – மதுரை:
“கடிதம் போட்டு இருக்கோம், கடிதம் போட்டு இருக்கோம்னு சொல்லி மாணவர்களுக்குப் பொய்யான நம்பிக்கை கொடுத்தது தவறான செயல். அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தோட விளையாடுறாங்கனுதான் சொல்லணும். நீட்டை அரசியலாக மாற்றி வாக்கு கேட்குறாங்களே தவிர லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமென்று பார்க்காதது வருத்தமளிக்கிறது.

கபீலன்

இந்த முறை நீட் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலான மாணவர்கள், இதற்கு முன் நடந்த இரண்டு நீட் தேர்வில் தோற்று தங்களை தயார்படுத்தியவர்கள்தான். இப்போ எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்னு இருக்கிற நீட்தேர்வு முறைகள், கூடி விரைவில் மாற்றத்துக்கு உள்ளாகலாம். இத்தனை முறை மட்டும்தான் எழுத முடியும்னு சொல்லலாம். அப்போ தமிழக மாணவர்களின் நிலை என்னனு யோசிச்சுப் பாருங்க. கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் தங்கள் மருத்துவ வாய்ப்பை தொலைச்சுட்டு வர்றாங்கனுதான் சொல்லணும்.” என்றார்.
ஆரோக்கியராஜ் – விழுப்புரம்:
“தமிழக மாணவர்களுக்குக் கடைசியாக இருந்த ஒரு சதவிகித நம்பிக்கையும் இப்போ தொலைஞ்சு போயிருச்சு. நீட் தவிர்க்க முடியாத ஒன்றுனு தெரிஞ்ச பிறகு, மாணவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி தங்களை தயார்படுத்த தொடங்கிட்டாங்க என்பது உண்மைதான். ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு நீட் விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறையவே இருந்துச்சு. மற்ற மாநிலங்களில் இருக்க மாதிரியான பாடத்திட்டங்களோ, கல்விமுறைகளோ தமிழ்நாட்டில் இல்லாத போது நீட் மட்டும் பொதுவாக்கப்படுவது என்ன நியாயம்னு தெரியல.

ஆரோக்கியராஜ்

உச்ச நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் சார்பாக சொல்லப்பட்ட தகவல் உண்மையில் அதிர்ச்சிகரமாகத்தான் இருந்துச்சு. அரசாங்கத்திடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான் மாணவர்களின் எதிர்காலத்தை அரசியல் ஆக்காதீங்க” என்கிறார்.
நிஷா – விருதுநகர்:
“இதுதான் நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சதுதான். அதுனால் காலம் தாமதிக்காமல் நிலவரத்தைச் சொல்லி எங்கள் வீட்டுக் குழந்தைகளை தயார்படுத்த ஆரம்பிச்சுட்டோம். அரசாங்கத்துடைய பொறுப்பற்ற தன்மைக்காக, நம்ம குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிக்க முடியுமா சொல்லுங்க… உண்மையைச் சொல்லணும்னா நீட் பயிற்சி வகுப்புகளுக்காக ஒவ்வொரு மாதமும் பல ஆயிரங்க செலவழிச்சுட்டு இருக்கோம். பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களையும் அந்தக் குழந்தைகளின் கனவையும் நினைச்சாதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.
விலக்கு கிடைக்காதுனு உண்மை நேற்றே பட்டவர்த்தனையாக தெரிஞ்சு போச்சு இனியும் தாமதிக்காமல், அரசாங்கப் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகளைச் சிறப்பாக நடத்தும் வழிமுறைகளையாவது அரசாங்கம் எடுக்க வேண்டும்” என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here