பள்ளி-கல்லூரி பாடத்திட்டங்களில் உள்ள அனைத்து வகையான கணக்குகளுக்கும் வரைபடத்துடன் விடையளிக்கும் புதிய செயலியை அமெரிக்க வாழ் தமிழக மாணவர் வடிவமைத்துள்ளார்.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த அனிதா-ரமேஷ் தம்பதி கடந்த 23 ஆண்டுகளாக அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்ரம் ரமேஷ், அங்குள்ள வெஸ்ட் வின்ஸர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

 சிறுவயது முதலே கணக்கீடுகள், குறியீடு (coding) போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த விக்ரம், கடினமான கணக்குகளுக்கும் எளிதில் விடை காணும் வகையில் flash natural language என்ற பெயரிலான ஒரு பிரத்யேக செயலியை வடிவமைத்துள்ளார்

இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
உறுதுணையாக இருந்த பெற்றோர்: இந்த செயலியின் செயல்பாடுகள், பயன்கள், உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விக்ரம் ரமேஷ் கூறியது:

 எனது தந்தை ரமேஷ் அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்திலும், தாய் அனிதா செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர். இந்தச் செயலியை உருவாக்க நான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.

சிறுவயது முதல் கிராபிக்கல் கால்குலேட்டரை அதிகளவில் பயன்படுத்தியதன் மூலம் இந்தச் செயலியை உருவாக்கும் யோசனை உருவானது.
கூட்டல், கழித்தல் முதல்
அல்ஜிப்ரா வரை: ஃபிளாஷ் எனப்படும் இந்த செயலி மூலமாக கடினமான கணக்குகளுக்கு எளிதாக விடை காண முடியும்.

 குறிப்பாக தற்போது பள்ளி, கலை அறிவியல்- கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் உள்ள கூட்டல்-கழிதல், அல்ஜிப்ரா, கால்குலஸ், ஜியோமெட்ரி, லீனியர் அல்ஜிப்ரா போன்ற கணக்குகளுக்கு தீர்வு காணலாம். இதைப் பயன்படுத்த விரும்புவோர் flash natural language செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

 இந்தச் செயலி மைக் போன்ற கட்டமைப்பில் இருக்கும். இதையடுத்து இந்த செயலியை விரலால் அழுத்திப் பிடித்து விடை காண விரும்பும் கணக்கை குரல் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

 இதைத் தொடர்ந்து கருப்பு நிறத்தில் இருக்கும் செயலி, சிவப்பு நிறத்தில் மாறும். பின்னர், உள்ளீடு செய்யப்பட்ட கணக்குக்கான விடையை படிப்பாக வெளிப்படுத்தும். அந்த விடை எண்கள், வரைபடம் என இருவகைகளில் இருக்கும்.

முப்பரிமாண முறையில் விடைகள்: இதன் மூலம் வகுப்பறை, தேர்வுகளில் கணக்குகளுக்கு நாம் எழுதிய விடைகள் சரியானதுதானா? என்பதை சோதித்துக் கொள்ள முடியும்.

 நம் தேவைக்கேற்ப இரு பரிமாண, முப்பரிமாண முறைகளிலும் (2டி-3டி) விடைகள் வெளிப்படும். அதே நேரத்தில் வகுப்பில் கணித ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுக்கும் வீட்டுப்பாடங்களை இந்தச் செயலியைப் பயன்படுத்தி தீர்வு காண முயற்சிக்க கூடாது. ஏனெனில் ஒரு கணக்குக்கு ஆசிரியர் கையாளும் படிப்படியான முறைகள் அனைத்தும் இந்தச் செயலியில் காண முடியாது.

மாறாக, விடைக்கான சுருக்க முறைகளைப் பார்க்கலாம். இந்தச் செயலியின் செயல்பாடுகள், பயன்படுத்தும் விதம் குறித்து மதுரையில் உள்ள சில பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளேன்

. தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய சூழலில் கணித ஆசிரியர்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் இந்தச் செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.

14 நாடுகளில் பதிவிறக்கம்: நான் வடிவமைத்த செயலி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 14 நாடுகளில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செயலி குறித்த சந்தேகங்களுக்கு vikramramesh04@gmail.com, aneta.
ramesh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்புகொள்ளலாம் என்றனர்.

இது குறித்து விக்ரம் ரமேஷின் தாய் அனிதா ரமேஷ் கூறுகையில், தமிழகத்தில் சில கல்லூரிகளில் இந்தச் செயலி குறித்து விக்ரம் விளக்கமளித்தபோது, பொறியியல்-பாலிடெக்னிக் குறித்த அனைத்து கணக்கீடுகளுக்கும் எளிதாக எப்படித் தீர்வு காண்பது என்ற விடியோ பதிவு வெளியிடுமாறு பேராசிரியர்கள் கேட்டுள்ளனர். அதற்கான முயற்சியில்
விக்ரம் ஈடுபடுவார் என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here