தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து205 சத்துணவு மையங்களில் 70 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கூடுதல் பணிச்சுமையால் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 205 சத்துணவு மையங்களில் 2.25 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

 இம்மையங்களில் 52 லட்சம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சத்துணவு பெறுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையிலான உணவு வகைகளும், முட்டையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என 3 பேர் என ஒரு மையத்தில் இருக்க வேண்டும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் 2.25 லட்சம் ஊழியர்கள் சத்துணவு மையங்களில் பணியில் இருக்க வேண்டும். அரசின் கணக்கும் அவ்வாறே சொல்கிறது. ஆனால், சத்துணவு மையங்களில் மொத்தமாக 70 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன.

 மக்களவை தேர்தலுக்கு முன்பு பல மாவட்டங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல மாவட்டங்களில் பணி நியமனத்துக்கான பட்டியல் தயாராகியும் அரசியல் குறுக்கீடுகள் காரணமாக பணி நியமனம் நடைபெறவில்லை.

 தற்போதைய சூழலில் சத்துணவு மையங்களில் 22 ஆயிரம் சத்துணவு மைய அமைப்பாளர் பணியிடங்களும், 48 ஆயிரம் சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் ஒரு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் 2 முதல் 3 ைமயங்கள் வரை கூடுதலாக பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்தான தரமாக சமைக்கப்பட்ட உணவு கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதுடன், வேறு பல சிக்கல்களையும் உருவாக்கலாம் என்கின்றனர் சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள்.

இதுதொடர்பாக சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘மாநிலத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே சத்துணவு மையங்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

 அதன்பிறகு இவ்விஷயத்தில் அரசு சுணக்கம் காட்டி வருகிறது. இப்போதைய நிலையில் மாநிலத்தில் மொத்தமாக 20 சதவீத காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

துல்லியமாக கூற வேண்டும் என்றால் சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் 48 ஆயிரம் வரை காலியாக உள்ளன. சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் 22 ஆயிரம் வரை காலியாக உள்ளன.

 இவற்றை நிரப்ப வேண்டும். அதோடு அங்கன்வாடி மைய பணியாளர்கள், சத்துணவு மைய பணியாளர்களின் சம்பள வேறுபாட்டை களைவதுடன், குறைந்தபட்ச பென்சன் தொகை ₹2 ஆயிரம் என்பதை அதிகரிக்க வேண்டும்.

அதேபோல் சத்துணவு மையங்களில் சத்துணவு தயாரிப்பு தொடர்பான செலவினங்களை இப்போதைய சூழலுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும்’ என்று கூறினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here