சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன்கீழ்  முதல்வர்  சம்பள உயர்வை அறிவிக்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை.

இது குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-

110விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த வேலை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன்கீழ் 26.08.2011ல் அறிவிக்கப்பட்ட வேலை இது. அதன்பின் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு 2012ம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி,   ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய 8 கல்வி இணைச் செயல்பாட்டுக்கான பாடங்களை நடத்திட SSA திட்டத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.

9 ஆண்டுகளில் 2முறை மட்டுமே சம்பள உயர்வு

       பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வானது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ரூ.2 ஆயிரமும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ரூ.700ம் என கடந்த 8 எட்டு ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே தரப்பட்டது. இதனால் 9வது ஆண்டாக பணபுரியும் எங்களுக்கு தற்போது தரப்படும் ரூ.7ஆயிரத்து எழுநூறு சம்பளமானது தினக்கூலியைவிட குறைவானது. வருடாந்திர சம்பள உயர்வு 10 சதவீதம் சரிவர தரப்பட்டிருந்தால் சம்பளம் ரூ.10ஆயிரம் எப்போதே கிடைத்திருக்கும்.

4 ஆயிரம் காலிப்பணியிட நிதி ஒதுக்கீடு – 12ஆயிரம் பேருக்கு பகிர்க

16549 பேரில் 4ஆயிரம்  காலிப்பணியிடங்களின் ஒதுக்கப்படும் நிதியை தற்போது பணிபுரிந்துவரும் 12ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே ஊதிய உயர்வு ரூ.10ஆயிரம்வரை வழங்கமுடியும். இதனுடன் 7வது ஊதியக்குழு 30சதவீத ஊதிய உயர்வு அமுல்செய்து தந்தால் ரூ.15ஆயிரம்வரை அரசு வழங்க வழி இருக்கிறது. எனவே இதனை அரசு உடனடியாக தர முன்வரவேண்டும்.

மே மாதம் சம்பளம் இல்லை, போனஸ் இல்லை

9 ஆண்டுகளாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால் அரசின் எந்தவித பணபலன்களையும் பெறமுடியாமல் இக்குறைந்த சம்பளத்தில் வறுமையில் குடும்பத்தை நடத்திவருகிறோம். எல்லாருக்கும் தரப்படும் போனஸ் எங்களுக்கு ஒருமுறைகூட தந்ததில்லை என்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மே மாதம் சம்பளம் இதுவரை கடந்த 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால் அனைவரும் ரூ.50ஆயிரத்துக்கும்மேல் இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கான பணிநியமன ஆணையில் மே மாதம் சம்பளம் கிடையாது என குறிப்பிடாத நிலையில் இதுபோல நடவடிக்கை எங்களை மேலும் பாதிக்கிறது.

மேலும், 58 வயதாகி பணிஓய்வு பெற்றவர்கள், இறந்தபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் குடும்ப நல நிதி எதுவும் கிடைக்காமலும் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள்.

கோவாவில் 15ஆயிரம், ஆந்திராவில் 14 ஆயிரம்

கோவா மாநிலத்தில் SSA  பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.15ஆயிரம் தொகுப்பூதியம், ஆந்திரா மாநில SSA  பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால  விடுப்பு தருகிறார்கள். எனவே  தமிழக அரசும் பணிநிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்சம் கோவா, ஆந்திரா மாநில அரசுகள் வழங்கும் சம்பளத்தைப்போல ரூ.15 ஆயிரம் வழங்குங்கள் என கேட்டு வருகிறோம்.

ஜாக்டோஜியோ போராட்ட நாட்களில் கூடுதல்பணி

ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் போராட்ட நடத்திய காலங்களில் அரசின் உத்தரவின்படி ஊதியம் எதுவுமின்றி முழுநேரமும் பள்ளிகளை திறந்து நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசு சலுகைகளை செய்ய முன்வரவேண்டும் என எதிர்பார்த்து வருகிறோம்.

பட்ஜெட்டில் தொடர்ந்து ஏமாற்றம்

நாங்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இதோடு 2வது முறையாக ஆட்சி செய்யும் அதிமுக அரசின் பட்ஜெட்டில் இதுவரை ஒருமுறைகூட பகுதிநேர ஆசிரியர்கள் சம்பள உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்வது குறித்து அறிவிப்புகள் வெளியிடாதது எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.

சம்பள உயர்வு இல்லையெனில் பணிநிரந்தரம் என இரண்டில் ஒன்று

ஒன்று எங்களை பணிநிரந்தரம் செய்யுங்கள் இல்லையெனில் குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளத்தை கொடுங்கள் என்ற இரட்டை கோரிகைகளை வலியுறுத்தி கேட்டு வருகிறோம்.

எனவே இம்முறையாவது பணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆகுமெனில் குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளமாவது கொடுங்கள். இந்த பட்ஜெட் மானியக்கூட்டத்தொடரில் சட்டமன்ற பேரவை விதி எண் 110-ன்கீழ்  முதல்வர்  அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி கேட்டுள்ளோம் என்றார்.

இவண்,

சி.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் 9487257203

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here