அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும்.தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி பேச்சு.

புதுக்கோட்டை,ஜூலை.5 : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும்,புதுக்கோட்டை மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பு வகிப்பவருமான செ.சாந்தி கலந்துகொண்டு தலைமை தாங்கி கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது; 2019-2020ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம்,மாநில அளவில் முதன்மையான இடத்தினைப் பெற அவரவர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பான வழிகாட்டலை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும். அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து ஒவ்வொரு மாணவரின் திறனுக்கேற்றவாறு ஆசிரியர்கள் பயிற்சியளித்து அவ்வப்போது நடத்தும் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை உரிய மதிப்பெண் பதிவேடுகளில் பதியப்படவேண்டும்.6,7,8,9 ஆகிய வகுப்புகளில் தமிழ்,ஆங்கிலம் வாசிக்காத மாணவர்களை கண்டறிந்து இணைப்பு பயிற்சி வழங்கப்படவேண்டும்.அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை தலைமையாசிரியர்களும்,ஆசிரியர்களும் உறுதி செய்யவேண்டும். மாணவர்களுக்கு பேட்டரி டெஸ்ட் மேற்கொள்ளவேண்டும். பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குழு ஏற்படுத்தவேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர் நடத்தும் தலைமையாசிரியர் கூட்டத்தில் கூறும் கருத்துக்கள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் சென்றடையும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நோட்டு பராமரித்து அதில் முதன்மைக்கல்வி அலுவலர் நடத்திய தலைமையாசிரியர் கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் பதியப்படவேண்டும். பள்ளி வளாகமும்,வகுப்பறையும்,கழிப்பறையும் தூய்மையாக பராமரிக்கவேண்டும். கல்வித்தகவல் மேலாண்மை முறைமையின்(எமிஸ்) இணையதளத்தில் மாணவர் சேர்க்கை விவரங்கள் உடன் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் எமிஸ் இணைய தளத்தில் ஆசிரியர் தொடர்பான அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும். அனைத்து மாணவர்களின் வருகைப்பதிவினையும் ஒவ்வொரு நாளும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை ஒவ்வொரு நாளும் குறுந்தகவல் அனுப்பவேண்டும்.2019-2020 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் ஆதாருடன் கூடிய தொடு உணர் கருவி மூலம் ஆசிரியர்களின் வருகை கண்காணிக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தரவேண்டும்.கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் அரசால் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்துப்பள்ளிகளும் தொலைக்காட்சி பெட்டியுடன் செட்டாப் பாக்ஸை இணைத்து தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ராகவன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் திராவிடச்செல்வம்,இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ராஜேந்திரன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள், மற்றும் புதுக்கோட்டை மாவட்த்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்…

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here