கடந்த 2017-2018 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை, வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் புஷ்பா, வெற்றிவேல் உள்ளிட்ட 210 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே கல்வி உதவித்தொகையாக வழங்க முடியும் என தெரிவித்திருந்தது. 
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பிருந்த நடைமுறையின் படி, 2017-18-ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை முழுமையாக வழங்க உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 2017-2018 கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்த எங்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு திரும்பத் தரவில்லை. எனவே அந்த கல்விக் கட்டணத்தைத் திரும்பத் தர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. 
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் கந்தன்துரைசாமி, விஜய் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி, மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திரும்பத் தர வேண்டும் எனக்கூறி வாதிட்டனர். 
அப்போது அரசுத் தரப்பில், கட்டணத்தைத் திரும்ப பெறும் மாணவர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் கல்விக் கட்டணம் மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசுத் தரப்பு பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 2017-18- ஆம் கல்வியாண்டின் மாணவர்கள் விவரங்களை சரிபார்த்து வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் கட்டணத்தைத் திரும்பத் தர வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here