படிக்கும் பொழுதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் அரசுப் பள்ளி மாணவிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டு

புதுக்கோட்டை,ஜூன்.26: படிக்கும் பொழுதே பத்திரிக்கை துறையில் சாதிக்க துடிக்கும் திருவரங்குளம் ஒன்றியம் ஈட்டித் தெரு அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி இயலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ஊடகத்துறையில் பெண்களின் எண்ணிக்கை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தான் உள்ளது.இந்த சூழலில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு இத்துறையில் ஆர்வம் என்றால் பாராட்டியே ஆக வேண்டும். ஊடகத்துறையில் செய்தி சேகரிப்பவர்களுக்கு வடிவமைக்க தெரியாது.வடிவமைக்க தெரிந்தவர்களுக்கு செய்தி சேகரிக்க தெரியாது.இரண்டும் தெரிந்தவர்களுக்கு எடிட்டர் ஆகும் வாய்ப்பு குறைவு.இவை அத்தனையும் தெரிந்தாலும் பத்திரிக்கை முதலாளி ஆவது சிரமம்.பள்ளி மாணவப்பருத்திலே தனி இதழ்கள் நடத்தியவர்கள் பலர் இருந்தாலும் அதில் முத்திரை பதித்தவர்கள் ஒரு சிலரே.அந்த வகையில் தற்கால அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கோடைகால விடுமுறையை பயன்படுத்தி நாளிதழ் வடிவமைப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியினை பெற்று அப்பயிற்சியின் மூலம் நல்ல பத்திரிக்கை என்ற மாத இதழை தானாகவே வடிவமைத்து தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் கல்வித்துறை அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்று இருக்கின்றார் அரசுப்பள்ளி மாணவி க.இயல்

மாணவி க.இயல் வடிவமைத்த நல்ல பத்திரிக்கையை வெளியிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது: ஓர் அரசுப் பள்ளி மாணவி பத்திரிக்கையை வடிவமைப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரிய செயல் ஆகும்.நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது என்றார்.பின்னர் மாணவி இயலிடம் நீ எவ்வாறு உனது பெற்றோரை பார்த்து கற்றுக்கொண்டாயோ அதை போல் உன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கும் நீ கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மாணவி சு.க.இயல் கூறியதாவது:சிறு வயதில் இருந்து அப்பா செய்தி டைப் பண்ணுவதை பார்க்கும் பொழுதும் செய்தி வடிவமைப்பதை பார்க்கும் பொழுதும் எனக்கும் அப்பா போல் வர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.அப்பா இந்த துறையில் இல்லை என்றால் எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தற்பொழுது எனக்கு பத்திரிக்கைத் துறையில் ஆர்வம் இருப்பதால் சிந்திக்கும் திறன் ,கற்பனைத்திறன்,படைப்பாற்றல் திறன் அதிகமாக உள்ளதாக உணர்கிறேன்.எனக்கான ஆர்வத்தை அப்பாவிடம் முதலில் கூறியவுடன் என் அப்பா கோடை கால விடுமுறையில் செய்தி டைப் பண்ணுவது குறித்தும் வடிவமைப்பது குறித்தும் கற்றுக் கொடுத்தார்.அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட நான் அவரது வாட்ஸ் அப் எண்,இமெயில் முகவரிக்கு வரும் செய்திகளை எடுத்து டைப் பண்ணவும், வடிவமைக்கவும் கற்றுக் கொண்டேன். பின்னர் நான் வடிவமைத்த நாளிதழுக்கு நல்ல பத்திரிக்கை என பெயர் வைத்தேன்.எனது ஆசை எல்லாம் பிற்காலத்தில் ஒரு பத்திரிக்கையாளராக வரவேண்டும்.பத்திரிக்கையாளர் ஆகி நல்ல செய்திகளை மக்களுக்கு தர வேண்டும். பொதுமக்களும் கடையில் சென்று நல்ல பத்திரிக்கை தாங்க என கேட்டு படிக்க வேண்டும் என்பதே. தற்பொழுது நான் பள்ளியில் படிப்பதால் என்னால் நாளிதழ் வெளியிட இயலாது.எனவே நான் படிக்கும் பள்ளியில் நடக்கும் நல்ல விஷயங்கள் ,மற்றும் நமது மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வைத்து மாதம் மாதம் நல்ல பத்திரிக்கையை வெளியிட்டு தலைமை ஆசிரியரிடம் வழங்குவேன் . இப்போதிருக்கும் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி முகநூல் வாட்ச்அப் போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு நல்லபத்திரிகையின் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் திட்டம் வைத்திருக்கிறேன். இன்னும் அறிவியல் வளர்ச்சிகள் வரும்பொழுது அதையும் அப்டேட் செய்துகொள்வேன்.தற்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் என்னை நேரில் அழைத்து பாராட்டியதையும் ,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் அவர்கள் என் பள்ளிக்கு வந்து என்னை பாராட்டி பரிசு வழங்கியதை நினைக்கும் பொழுதும் என் மனம் மகிழ்வாக உள்ளது என்றார்..

நிகழ்வின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு ) இரா.சிவக்குமார்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி கல்வி துணை ஆய்வாளர் வேலுச்சாமி,கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி தலைமையாசிரியர் கோவிந்தம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here