சென்னை, -இன்ஜினியரிங் படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, ஒரு லட்சம் இடங்கள் காலியாகும் வாய்ப்பு உள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 1.03 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம், 1.73 லட்சம் இன்ஜி., இடங்களுக்கு, நேற்று கவுன்சிலிங் துவங்கியது. முதல் கட்டமாக, சிறப்பு பிரிவினருக்கு, முதல் மூன்று நாட்கள், மாணவர் சேர்க்கை நடக்கிறது. நேற்று, மாற்று திறனாளி மாணவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். சென்னை, தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், 7,000 இடங்களுக்கு, 141 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள இடங்கள், பொது பிரிவில் சேர்க்கப்பட உள்ளன. இன்று, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், நாளை, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் சேர்க்கை நடக்கிறது.இதையடுத்து, ஜூலை, 3ல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, கவுன்சிலிங் துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு, 1.73 லட்சம் இடங்களில், ஒரு லட்சம் இடங்கள் காலியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.நேற்றைய கவுன்சிலிங்கில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை என, பெற்றோர் தெரிவித்தனர். போதிய அளவுக்கு, குடிநீர் வசதி, மாணவர்களுக்கான சாய்தள வசதிகள் செய்யப்படவில்லை.அதேபோல், கவுன்சிலிங்கில், ஒவ்வொரு மாணவருக்கும் இடம் ஒதுக்கப்படும் போது, காலியாக இருக்கும் இடங்கள் விபரம், மின்னணு தகவல் பலகையில் வெளியிடப்படும். ஆனால், நேற்று காலியிட விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.கவுன்சிலிங்கில் காலியாகும் இடங்களின் விபரங்களை, இணையதளத்திலும், கவுன்சிலிங் கமிட்டி வெளியிடவில்லை. இந்த குளறுபடிகளால், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழியாக, வழக்கமான இடங்களாவது, இந்த ஆண்டு நிரம்புமா என, கல்லுாரி நிர்வாகங்கள் அச்சத்தில் உள்ளன.***

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here