அரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை படைத்துள்ளது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

புதுக்கோட்டை,ஜீன்.25: அரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு தொடங்கி சாதனை படைத்துள்ளது என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.

புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கு கல்வி தொலைக்காட்சி படப்பிடிப்பு செயல்பாடுகள் தொடர்பான மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழுவினருக்கான ஆயத்தக்கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது:இனி வரும் காலங்களில் கல்வித் தொலைக்காட்சியானது பாட இணைச்செயல்பாடுகளில் ஒரு அங்கமாகும். எனவே கல்வித் தொலைக்காட்சி குறித்த படப்பதிவு எடுக்கும் பொழுது சிறப்புடன் செயல்படும் அனைத்து வகைப்பள்ளிகள்,புதுமை புனையும் பள்ளிகள் ,சிறந்த முன்மாதிரிப் பள்ளிகளை தலைப்பிற்கு ஏற்றவாறு படப்பதிவு நிகழ்த்த வேண்டும்.கல்வித் தொலைக்காட்சிக்கு தேவையான நிகழ்ச்சிகளை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கும் தலைப்புகளில் வழங்கிட வேண்டும்.கல்வித் தொலைக்காட்சிக்கு தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சொற்பிழை,பொருட்பிழை,இரட்டை அர்த்த வசனங்கள்,தனிநபர் தாக்குதல்கள் , எதிர்மறையான கருத்துகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.படப்பதிவு நடத்தும் பொழுது மாணவர்களின் பாதுகாப்பு,பெற்றோரின் அனுமதி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.அனைத்து மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரித்திடல் வேண்டும்.மேலும் மாணவர்களிடம் பொதிந்து இருக்கக் கூடிய திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும்.படப்பதிவு குழுவுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் . கல்வித்தொலைக்காட்சியில் இடம்பெறக்கூடிய பல்வேறு தலைப்பிலான நிகழ்ச்சிகளில் நமது மாவட்டத்தில் திறமையும்,தகுதியும் உடைய ஆசிரியர்களையும்,மாணவர்களையும் பங்கேற்க செய்து அவரவர்களுக்குரிய திறமைகளை வெளிக்கொண்டு வந்து நமது மாநிலத்தில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களையும்,மாணவர்களையும் பயன்பெற செய்வதின் வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.. இத்தகைய சிறப்புபெற்ற கல்வித்தொலைக்காட்சியில்
அரசுப் பள்ளி ஆசிரியர்களால் மாணவர்களுக்கென செயற்கைக் கோள் வாயிலாக கல்வி நிகழ்ச்சிகளை ஒரு அரசாங்கம் வழங்குவதென்பது போற்றுதலுக்கும் ,பாராட்டிற்கும் உரியதாகும்.இது தமிழக பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் மிகப்பெரிய சாதனை மைல்கல் ஆகும்.குறிப்பாக தமிழக அரசின் கல்வித்தொலைக்காட்சி சேனலானது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி கல்வி சேனலாகும். என்றார்.

கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( பொறுப்பு)இரா.சிவக்குமார்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம்,இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் கல்வித்தொலைக்காட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கல்வித்தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here