சென்னை:அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்காக நேற்று நடந்த தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டது. தேர்வர்கள் கூட்டாக, ‘காப்பி’யடித்ததை, சக தேர்வர்களே கண்டுபிடித்தனர்.அரசு மேல்நிலைப் பள்ளி களில், கணினி பாடப்பிரிவுக்கு, இதுவரை பட்டப்படிப்பு முடித்தவர் களே, ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், ‘எம்.எஸ்.சி., முடித்தவர்கள் மட்டுமே, இந்த பதவியில் சேரலாம்’ என, தமிழக அரசு, புதிய அரசாணை பிறப்பித்தது.இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, கணினி பாட பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு, 30 ஆயிரத்து, 833 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்காக, 119 மையங்கள் ஒதுக்கப் பட்டு, நேற்று கணினி முறையில் தேர்வு நடத்தப்பட்டது.அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், கணினி தேர்வுக்கான வசதிகள் இல்லை.

எனவே, தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.சென்னையில், தி.நகர் ரேஸ் பயிற்சி மையம், ஆவடி, ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்லுாரி, பெருங்களத்துார், ஜி.கே.எம்., இன்ஜி., கல்லுாரி, மதுரையில், கே.எல்.என்., தொழில்நுட்ப கல்லுாரி, திருச்செங்கோடில், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்கள் உட்பட, 119 இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.காலை, 10:00 மணி தேர்வுக்கு, 9:15க்கே தேர்வறைக்குள், தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். பல இடங்களில், தேர்வர்களுக்கு கணினியை ஒதுக்க தாமதமானது. அதுமட்டுமின்றி, போதிய கணினி இல்லாததால், பெரும்பாலான தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர்.’சர்வர்’ பழுதுகணினி ஒதுக்கப்பட்ட தேர்வர்களுக்கு, தேர்வுக்கான மூன்று மணி நேர, ‘கவுன்டவுன்’ நிர்ணயிக்க பட்டது.

ஆனால், பல இடங்களில், ‘சர்வர்’ குளறுபடியால், கணினி இயங்காமல், ‘ஹேங்க்’ ஆனது. எனவே, உரிய நேரத்தில் தேர்வை முடிக்க முடியவில்லை. சிலருக்கு, தேர்வை துவங்கியது முதல், மூன்று மணி நேரம் வரையிலும், சர்வர் வேலைசெய்யவில்லை.பல தேர்வு மையங்களின் சரியான முகவரியை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்காததால், தேர்வர்கள் முகவரி தெரியாமல் தவித்தனர். சில தேர்வர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து, 150 கி.மீ.,யில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதால், அங்கு சென்று சேரவும் சிரமப்பட்டனர்.குளறுபடிஇதைவிட உச்சகட்ட குளறுபடியாக, பல தேர்வு மையங்களில், தேர்வர்கள் கூட்டாக சேர்ந்து, தெரிந்த விடைகளை கணினியில் பதிவு செய்து உள்ளனர்

.சில தேர்வு மையங்களில் இருந்தோர், பதில்களை கூறி உதவியுள்ளனர். வேறு சிலர், மொபைல்போனில் பதில் கேட்டு எழுதியுள்ளனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், தேர்வர்கள் காப்பியடிப்பதும், தேர்வு மையத்தில் கூச்சல் குழப்பமாக உள்ளதும், வீடியோவாக, ‘வாட்ஸ் ஆப்’பில் பரவியுள்ளது. இதனால், நேர்மையாக தேர்வை முடித்தவர்கள், தங்களுக்கு வேலை கிடைக்குமா என, அச்சம் அடைந்துள்ளனர். தேர்வில் நடந்த முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளால், மாநிலம் முழுவதும் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர்.இது குறித்து தேர்வர்கள் கூறுகையில், ‘தேர்வில் காப்பியடிப்பதுஉள்ளிட்ட, பல முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், விடை மதிப்பீடு, தகுதி பட்டியல் தயாரித்தல் போன்றவற்றில், மேலும் முறைகேடுகள் நடக்கலாம்.

எனவே, தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்து, நியாயமான மறு தேர்வை நடத்த வேண்டும்’ என்றனர்.இதற்கிடையில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம், முதன் முறையாக கணினி வழி தேர்வை நடத்தி உள்ளது. ஒரு சில மையங்களில், கணினி தொழில்நுட்ப பிரச்னைகளால், சில தேர்வர்கள் தேர்வை எழுத முடியவில்லை. எனவே, தேர்வு மையத்துக்கு சென்று, தேர்வில் பங்கேற்காத வர்களுக்கும், தேர்வை முழுமையாக முடிக் காதவர்களுக்கும், வேறு நாளில் தேர்வு நடத்தப் படும்.எனவே, தேர்வர் கள் பயப்பட வேண்டாம். தேர்வு நடக்கும் நாள் குறித்த தகவல், தேர்வர் களுக்கு விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், ‘மக்கர்’ * மதுரையில், கே.எல்.என்., தொழில்நுட்ப கல்லுாரியில், தேர்வு எழுத வந்தவர்களில், பலருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.

தேர்வு எழுத சென்றவர்களும், ‘சர்வர்’ இயங்காததால், தேர்வை புறக்கணித்து வெளியே வந்தனர். தேர்வை ரத்து செய்யக் கோரி, முற்றுகை போராட்டம் நடத்தினர் * திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர்., கல்லுாரியில், ‘சர்வர்’ இயங்காததால், தேர்வு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால், தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தேர்வை, பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடத்த முடிவானது * நாகை மாவட்டம், இ.ஜி.எஸ்., பிள்ளை இன்ஜி., கல்லுாரியில், பலருக்கு தேர்வு எழுத இடம் கிடைக்காமல், போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அன்னை இன்ஜி., கல்லுாரி தேர்வு மையத்திலும், சர்வரில் பழுது ஏற்பட்டது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here