சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 1980 முதல் படித்து அரியர் வைத்திருப்பவர்களுக்கு, அந்தத் தாள்களை எழுதி பட்டம் பெற இரண்டு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இந்த சிறப்பு அனுமதி மூலம் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் 1980-ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் 5.5 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர்.
இந்த சிறப்பு அனுமதி திட்டத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:
பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொண்ட மாணவர்களில் சுமார் 5.5 லட்சம் பேர் அரியர் வைத்துள்ளனர். இதில் எம்.பி.ஏ. படிப்பில் மட்டும் 55 ஆயிரம் மாணவர்கள் அரியர் வைத்துள்ளனர்.
இந்த மாணவர்களின் நலன் கருதி, இவர்கள் அனைவரும் அரியர் தாள்களை மீண்டும் எழுதி பட்டம் பெற இரண்டு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இந்த இரண்டு வாய்ப்புகளில் அனைத்துத் தாள்களிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பட்டம் வழங்கப்படும். 
அவ்வாறு அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெறாமல் 50 சதவீத தாள்களில் மட்டும் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இளநிலை பட்டப் படிப்பு என்றால் சான்றிதழ் படிப்புக்கான அங்கீகாரமும், முதுநிலை பட்டப் படிப்பு என்றால் டிப்ளமோ அங்கீகாரமும் வழங்கப்படும்.

இவ்வாறு சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ அங்கீகாரம் பெறும் மாணவர்கள் மீண்டும் அவர்களின் இளநிலை பட்டப் படிப்பையோ அல்லது முதுநிலை பட்டப் படிப்பையோ தொடர விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை அடிப்படையில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். 
இந்தத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்கிறது. 
இந்தத் திட்டத்துக்கு ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, விரைவில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் என்றார் அவர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here