தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் முதன்முறை பிடிபடும்போது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அடுத்த முறை பிடிபடும்போது அபராதத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வசூலிக்கப்படும். மீண்டும் அதே நிறுவனம் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் அந்த நிறுவனம் சீல் வைத்து மூடப்படும்.

தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ அல்லது எடுத்துச்சென்றாலோ முதல்முறை ரூ.1 லட்சமும், மீண்டும் பிடிபட்டால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து அதே குற்றம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். நெகிழி பொருட்களை விற்பனை அல்லது விநியோகம் செய்தால், முதல்முறை பிடிபடும்போது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அத்தகைய செயல் தொடர்ந்தால், அபராதம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு முதல்முறை ரூ.25 ஆயிரமும், மீண்டும் பிடிபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
சிறிய கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் முதல் தடவை ரூ.100, 2வது தடவை ரூ.200, 3வது தடவை ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகும் சிறிய கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படும். பிடிபடுவது முதல்முறையாக இருந்தால் ரூ.500 அபராதம், மறுபடியும் கண்டறியப்பட்டால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.
இந்த அபராதங்களை விதிப்பதற்கு சென்னையில் உள்ள மாநகராட்சி வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தடை உத்தரவு அமலுக்கு வந்த நாளான கடந்த ஜனவரி 1ம் தேதியிலிருந்து இதுவரை 250 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் அபராதம் வசூலிப்பு முறை அமலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here