சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாததால், நிகழ் கல்வியாண்டில் அனைத்து இடங்களும் நிரம்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டில் காலதாமதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பெரும்பாலான கல்லூரிகளில் பாரம்பரிய மருத்துப் படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன. 

அந்த நிலை தொடராமல் இருக்க இந்த விவகாரத்தில் அரசு உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான சுற்றறிக்கையை கடந்த ஆண்டே ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது.
ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1970-இல் இடம்பெற்றுள்ள ஒரு ஷரத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து, அந்த ஷரத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அந்த அறிவிப்பும் காலதாமதமாக வெளியிடப்பட்டதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், 40 சதவீத மருத்துவ இடங்கள் நிரம்பாமல் இருந்தன. இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.

இதற்கிடையே, இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால், நிகழாண்டில் நீட் தேர்வு மூலமாக மட்டுமே பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய அரசோ, இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
சுகாதாரத் துறை அமைச்சரும், இந்த விவகாரத்தில் உறுதியான தகவல் எதையும் கூறவில்லை. இதனால், மாணவர்களிடையே குழப்பமான நிலை நீடித்து வருகிறது. 
இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டில் இறுதித் தருவாயிலேயே பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. 

ஆனால், அதுவரை காத்திருக்காத பலர் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளில் சேர்ந்துவிட்டனர். இதனால், 40 சதவீத மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. நிகழாண்டும் அதே சூழல் நீடிக்கிறது. தற்போது தமிழகத்தில், 48.57 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
அவர்களின் எத்தனை பேர் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் சேருவார்கள் எனக் கூற முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் உரிய நிலைப்பாட்டை விரைந்து அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here