எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு வரை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. www.tnh-e-a-lth.org, www.tnm-e-d-i-c-a-ls-e-l-e-ct-i-on.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நேற்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்பட பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதல் நாளான நேற்று 12 ஆயிரத்து 584 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தபாலிலும் அனுப்ப வேண்டும்

மாணவ-மாணவிகள் ஆன்லைனில் அனுப்பிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரியில் 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத 11 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இ-சேவை மையம்

மேலும் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி வெளியிடப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகம் கவுன்சிலிங் நடத்துகிறது.

முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 4-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here