கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம்..

அன்பார்ந்த அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்களே.

“அ ஆ” என்ற இந்தத் தொடர் வழியாக உங்களுக்கு என் வணக்கம்…

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் புத்தகங்கள்  நமது கைகளுக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதுவரை நமது பள்ளி நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் ஒரு செயல்பாட்டினை , சிறு ஆலோசனையாக கூறுகிறேன். அதனை உங்கள் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திப் பாருங்கள்.
மாணவர்கள் சொந்தமாக சில வரிகள் பிழையின்றி எழுத இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது அனுபவம் .
செயல்பாடு 1 :
” நேற்று மாலை என்னென்ன செய்தீர்கள் ? என்பதை எழுதுங்கள். இன்று காலை பள்ளிக்கு வரும் வழியில் என்னென்ன நிகழ்வுகளைப் பார்த்தீர்கள் ? என்பதை எழுதுங்கள். விடுமுறையில் நீங்கள் என்னென்ன வேலைகளை செய்தீர்கள் ? என்பதை எழுதுங்கள். இப்படியான வினாக்களை மாணவர்களுக்கு கொடுத்து இதற்கான பதிலை மூன்று முதல் ஐந்து வரிகள் மட்டுமே எழுதச் சொல்லி பயிற்சி கொடுக்கலாம்.

செயல்பாடு 2 :
பழைய பாட நூலில் உள்ள படங்களில் ஏதேனும் ஒன்றினை எடுத்துக் கொண்டு அந்தப் படத்தைப் பார்த்து அதில் உள்ள பறவைகள் என்ன செய்கின்றன ? விலங்குகள் என்ன செய்கின்றன ? அதில் உள்ள மனிதர்கள் என்ன செய்கிறார்கள் ? என்று எழுத செய்யலாம். மேலும் அந்தப் படத்தைப் பார்த்து கற்பனையாகக் கூட சில வரிகளை எழுத செய்யலாம் . இதற்கு ஏ பி எல் பட அட்டைகள் இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேபோல செய்தித்தாள் , வார இதழ் , மாத இதழ்களில் வெளியாகியுள்ள படங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
படங்கள் மாணவர்களை கவனிக்கத்தூண்டும். பேசத் தூண்டும். கற்பனை செய்யத் தூண்டும். எழுதத் தூண்டும். கதை , கவிதை பண்ணத் தூண்டும்.
இப்படி மாணவர்களை , அவர்களது வயதுக்கு ஏற்றார் போல மூன்று வரிகள் முதல் அதிகப்படியாக எவ்வளவு வேண்டுமானாலும் எழுத செய்யலாம். இப்படி எழுதப்பட்ட வரிகளில் இருக்கும் இலக்கணப் பிழைகளை அதாவது , “பேச்சு வழக்கு சொற்களை நிச்சயமாக திருத்தம் செய்ய வேண்டும்”.
ஒவ்வொரு பேச்சுவழக்குச் சொல்லுக்கும் இணையான எழுத்து வழக்குச் சொல்லை கூறி திருத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு திருத்தும் பொழுது ஒவ்வொருவரையும் தனித்தனியாக திருத்தினாலும் அனைத்து மாணவர்களும் அதனை கவனிக்கும் விதமாக திருத்தினால் ஒருவர் செய்துள்ள பிழையின் தன்மை , அதை திருத்திக் கொள்ளும் பாங்கு எல்லோருக்கும் அனுபவமாக கிடைக்கும்.
இந்தத் தொடர் பயிற்சியின் மூலமாக இயல்பாக நாம் பேசும்போது பயன்படுத்தும்  பேச்சு வழக்கினை எழுத்து வடிவத்திற்கு எவ்வாறு மாற்றம் செய்வது என்பது பற்றிய அனுபவம் மாணவர்களுக்கு கிடைக்கும். 
இதே முறையை ஆங்கிலத்திற்கும் மேல் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படுத்தலாம்.
புத்தகம் இல்லாத போது கொடுக்கப்படும் இது மாதிரியான பயிற்சிகளை இதர விடுமுறை நாட்களிலும் , வீட்டில் கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் நான்கு அல்லது ஐந்து வரிகள் எழுதி வரச் . சொல்லலாம். அது மாணவர்களை சொந்த நடையில் பல பக்கங்கள் எழுதும் அளவிற்குப் பயிற்சி தந்து சாதிக்கத் தூண்டும்.
தயவு செய்து , உங்களுக்குத் தெரியாத எந்த ஒன்றையும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம் . சிறு நினைவூட்டல் மட்டுமே.
                            நன்றி!!!
வளர்வோம்…..
ச.சந்திரசூட் (07.06.2019)
ஊ.ஒ.து. பள்ளி,
பால் மடைப்பட்டி,
கரூர் மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here