🦜💐🦜💐🦜💐🦜💐🦜💐🦜

*மழலையர் வகுப்புகள் 3 ஆண்டு, இளநிலை பட்டப்படிப்பு 4 ஆண்டு….! கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை கூறுவது என்ன?*

🦜💐🦜💐🦜💐🦜💐🦜💐

மழலையர் வகுப்புகள் 3 ஆண்டு, இளநிலை பட்டப்படிப்பு 4 ஆண்டு….! கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை கூறுவது என்ன?

மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயத்த கல்விமுறையை 8 முதல் 11 வயதினருக்கு கற்பிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேசியக்கல்விக்கொள்கையை மாற்ற அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக பார்க்கலாம்.

1992-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை மாற்றியமைக்க 2017-ம் ஆண்டில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் குழுவை, மத்திய அரசு அமைத்தது.

அந்த குழு 484 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம், நேற்று சமர்ப்பித்தது. 21-வது நூற்றாண்டின் தேவைகள் மற்றும் சவால்களை கருத்தில் கொண்டு வரைவு கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அக்குழு, பிளஸ் 2 வரையான வகுப்பு முறையை மாற்றி 5 + 3 + 3 + 4 என்ற 15 ஆண்டு அடிப்படையிலான பள்ளிக் கல்விமுறையை பரிந்துரைத்துள்ளது.

புதிய பரிந்துரைப்படி, இனி மழலையர் வகுப்பு மூன்றாண்டுகள் இருக்கவேண்டுமென்றும் அதனுடன் சேர்த்து ஒன்று மற்றும் 2-ம் வகுப்பு வரையிலான 5 ஆண்டுகள், ஆரம்பக் கல்வியாக பயிற்றுவிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆரம்பக் கல்வி 3 முதல் 8 வயதினருக்கானதாகும்.

அடுத்ததாக மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயத்த கல்விமுறையை 8 முதல் 11 வயதினருக்கு கற்பிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Loading…
6 முதல் 8ம் வகுப்பு வரை நடுநிலைக் கல்வியாக, 11 முதல் 14 வயதினருக்கு பயிற்றுவிக்கவேண்டும் என்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செகண்டரி கல்விமுறையாக இருக்கவேண்டும் என்றும் கஸ்தூரி ரங்கன் குழு அறிவுறுத்தியுள்ளது.

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் கல்லூரிகளில் உள்ளதுபோல் இரு செமஸ்டர்கள் தேர்வு நடத்தப்படும். இது 14 வயது முதல் 18 வயதினருக்கானது.

மேலும் இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 6 முதல் 8 -ம் வகுப்புகளில் ஏதேனும் இரு ஆண்டுகளில் தமிழ் கன்னடம், மலையாளம், உள்ளிட்ட 8 செம்மொழிகளில் ஒன்றையும் மற்றும் சமஸ்கிருதத்தை எல்லா வகுப்புகளிலும் விருப்பப் பாடமாக மாணவர்கள் படிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி 12-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி முறை இருக்கவேண்டும் என்றும் 5-ம் வகுப்பு வரை சத்துணவு வழங்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது

கல்லூரிக் கல்வியில் 3 ஆண்டு இளங்கலை படிப்பை 4 ஆண்டாக மாற்றவேண்டுமென்றும், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள், ஜூன் 30-ம் தேதி வரை தங்கள் கருத்துக்களை nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here