உடலிலிருந்து கழிவுகளை அவ்வப்பொழுது வெளியேற்ற வேண்டும். வெளியேற்றாவிட்டால் அதுவே நோய்க்கான மூல காரணமாகிவிடும். கழிவுகளை வெளியேற்றும் முறைகளில் ஒன்று, நசியம். “தேறுமதியொன்றைக்கோர் தர நசியம் பெறுவோந்” என்று தேரையர், பிணியணுகா விதியில் கூறியுள்ளார். ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை நசியம் செய்துகொள்ள வேண்டும்.

நசியம் என்றால் என்ன?

இதற்கான மூலிகை சாறு, பொடி, எண்ணெய் அல்லது குடிநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நம் உடல் நிலைக்கு ஏற்ப மூன்று முதல் ஐந்து துளி வரை மூக்குத்துவாரத்தில் விடவேண்டும். இதன்மூலம் கழுத்திற்கு மேல் உள்ள உறுப்புகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம். காது, மூக்கு, தொண்டை நோய்கள், மூக்கடைப்பு, சைனஸ், ஒற்றைத் தலைவலி, தலைமுடி உதிர்வது, தொண்டையில் தசை வளர்ச்சி, தோள் வலி போன்றவற்றுக்கு தீர்வு கிடைக்கும். வேலைப்பளுவினால் வரும் கோபம், பதற்றம் போன்ற உணர்வுகளாலும் தலைவலி, மன இறுக்கம் உண்டாகிறது. நசியம் செய்வதால், மன இறுக்கம் குறையும்.

நசியம் செய்வது எப்படி?

தலையை கீழ்புறமாக சாய்த்து மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்துக்கொண்டு ஒரு சிட்டிகை பொடியை அல்லது ஒரு துளி எண்ணெய்யை இன்னொரு துவாரத்தில் வைத்து மூச்சோடு இழுக்கவும். இவ்வாறு மறு நாசித் துவாரத்திலும் செய்யவும். மருந்து தொண்டையில் இறங்கும். அதை துப்பி விட வேண்டும். இப்படிச் செய்வதால், நரம்பு மண்டலம், தலை, இவைகளில் சேர்ந்துள்ள துர் நீர் அனைத்தும், சளி, தும்மல் மூலம் மூக்கின் வழியாக வெளியேறிவிடும்.

நாசித் துவாரம் வழியாகதான் நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு செல்கிறது. மூக்கின் உட்பகுதியில் உள்ள திசுக்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவை. எனவே அந்தப் பாதையை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு நசியம் உதவுகிறது. நசியம் செய்வதற்கு துளசி, கரிசாலை, தும்பை போன்ற சாறு வகைகளும், சுக்கு தைலம் போன்றவைகளும் பயன்படுத்தப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் நசியம் செய்யவேண்டும். நசியம் செய்து அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

உண்ணாவிரதம்

உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதற்கான வழிமுறைகளில் ஒன்று, உண்ணாவிரதம். சித்த மருத்துவத்திலும், யோகப் பயிற்சியிலும் உண்ணாநோன்பு முக்கிய இடம் பெறுகிறது. உணவைத் தயாரிப்பதிலும், பெறுவதிலும், உண்பதிலும், செரிப்பதிலுமே நமது நேரமும், சக்தியும் அதிகம் செலவாகிறது. சில வகை உணவுகள் நம் மூளையை மந்தமாக்கி நம் மன நிலையை பாதிக்கும் இயல்புடையது. எனவே தான் சில நாட்களில் நம் நேரமும், சக்தியும் அதிகம் வீணாகாமல் தவிர்க்க எளிதில் செரிக்கக்கூடிய உணவை உட்கொண்டோ அல்லது உணவை முற்றிலும் தவிர்த்தோ உண்ணாவிரதம் இருக்கின்றோம். இதனால் நேரமும், சக்தியும் சேமிக்கப்படுகின்றன. புத்தி கூர்மையாகிறது. மனம் தூய்மையாகி ஒருமுகப்படுகிறது. எந்த ஒரு எந்திரமும் ஓய்வின்றி உழைத்தால் பழுதடைவது இயல்பு. உடலுக்கும், உள்ளத்திற்கும் அவ்வப்போது பூரண ஓய்வு என்பது அவசியம். உண்ட உணவை செரிக்கச்செய்யும் ஜீரண வேலைக்கு, உயிராற்றலின் பெரும் பகுதியை செலவழிக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது உடலின் உயிராற்றலும் ஓயாது இயங்கவேண்டியதாகிவிடுகிறது. இதற்கு ஓய்வு கொடுப்பதுதான் உண்ணாவிரதம்.

மாதம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உண்ணாவிரதம் இருக்கலாம். ஏகாதசி, சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் நம் முன்னோர்கள் விரதம் கடைப்பிடித்தனர். விரத காலத்தில் நீரைத் தவிர வேறு எதையும் பருகக்கூடாது. பழங்களை மட்டும் சாப்பிடலாம். இவ்வாறு மாதம்இருமுறை செய்வதால் உடல் இயக்க சக்தி குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதாக ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாரத்தில் ஒரு நாள், காலை மற்றும் இரவு உணவை நீக்கி மதியம் ஒருமுறை மட்டும் உணவு உட்கொள்வதும் சிறந்தது. இதன் மூலம் மந்தம் நீங்கி உடல் சுறுசுறுப்படையும். இதை தான் ‘பட்டினி பெரு மருந்து’ என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

உண்ணாவிரதத்தினால் உடலின் உள்காயங்கள் குணமாகும். வளர்ச்சி ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். உடல் கொழுப்பு கரையும். தசைகள் வளரும். குறைபாடுள்ள செல்கள் பழுதுபார்க்க தூண்டப்படும். செல்களில் உள்ள உபயோகமற்ற பொருட்கள் வெளியேற்றப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, ஆயுள் அதிகரிக்கும். மூளையில் புதிய நியூரான்களின் உற்பத்தி தூண்டப்படும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்த பாதிப்புகொண்டவர்கள், இருதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here